EPS: ’மாட்டிவிடுவோம் என்ற பயம்.. ஆ.ராசா, கனிமொழி கைதில் கூட ஆர்ப்பாட்டம் இல்லை’- எடப்பாடி பழனிசாமி
எங்கே இதை எல்லாம் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் சென்று பார்க்கின்றனர் என தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.06 2023) காணொளி வாயிலாக வெளியிட்ட கருத்திற்கு இன்று ( 16 06 2023) அதிமுக கழகப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிச்சாமி பதிலுரை அளித்தார். அதில், “எல்லாருக்கும் வணக்கம், நேற்றைய தினம் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஊழல் குறித்து அமலாக்கத்துறை கைது செய்தது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில் அதிமுக பற்றியும், என்னை பற்றியும் சில கருத்துகளை தெரிவித்திருந்தார். அதுகுறித்து மக்களுக்கு முழு உண்மையை சரியான முறையில் தெரிவிக்க கடமை எனக்கு உள்ளது.
அமலாக்கத்துறை நடவடிக்கை:
உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியுடைய வழக்கு நடைபெற்று கொண்டிருந்தது. அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கலாம் என தெரிவித்தது. மேலும், இரண்டு மாதத்திற்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என தெரிவித்தது.
அவ்வாறு இரண்டு மாதத்தில் முடிக்காவிட்டால் உச்சநீதிமன்றமே சிறப்புக்குழு ஒன்றை அமைத்து விசாரிக்கும் என தெரிவித்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகத்தை சோதனை செய்தது.
இந்த சோதனைக்கு முழு ஆதரவையும் தருவேன் என்று சொன்ன செந்தில் பாலாஜி, அவ்வாறு செய்யவில்லை என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சோதனை மேற்கொண்டு செந்தில் பாலாஜியை கைதும் செய்தனர். அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதற்கட்ட சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
பரிந்து பேசும் முதலமைச்சர்:
இப்படியான சூழ்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் செந்தில் பாலாஜிக்கு பரிந்து பேசுகிறார். மேலும், ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வீடியோவில் பதற்றத்துடன் பேசுகின்ற காட்சியும் பார்த்தேன். இந்த பதற்றத்திற்கு என காரணம்..? அதிமுகவின் ஆட்சிக்கு பிறகு, திமுக ஆட்சிக்கு வந்தது. எதற்காக உங்களுக்கு ஆட்சி கொடுத்தார்கள். நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், ஆனால் நீங்களே மக்களை பற்றி சிந்திக்கவில்லை.
ஏனென்றால் ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சர், திறமையற்ற முதலமைச்சர். எதுவுமே தெரியாத ஒரு முதலமைச்சர். இன்று தமிழ்நாட்டை ஆட்சி செய்கிறார். எல்லா வழியிலும் பணம். அதனால்தான் அவரது அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சர் பிடிஆர் மனம் பொறுக்கமுடியாமல் ஆடியோ மூலமாக 30,000 கோடியை உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் வைத்துகொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள் என தெரிவித்தார்.
பயம்:
அதில் பெரும்பாலான பணம் அமைச்சர் செந்தில் பாலாஜி மூலமாகவே கிடைக்கின்றது என தகவல் வெளியாகி வருகிறது. எங்கே இதை எல்லாம் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் சொல்லிவிடுவாரோ? என்ற பயத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் சென்று பார்க்கின்றனர். செந்தில் பாலாஜி ஏதாவது கூறிவிட்டால் தன் ஆட்சி பறிப்போய் விடும் என்று முதலமைச்சர் அச்சப்படுகிறார். 2ஜி வழக்கில் ஆ.ராஜா, கனிமொழி கைது செய்யப்பட்டபோது கூட இவ்வளவு ஆர்ப்பாட்டம் இல்லை.” என தெரிவித்தார்.