(Source: ECI/ABP News/ABP Majha)
"ராமரை நீக்க முயற்சி செய்தால் நாடு இருக்காது" தடாலடியாக பேசிய தமிழ்நாடு ஆளுநர் ரவி!
ராமரை நீக்க முயற்சி செய்தால் பாரதம் இருக்காது என்றும் இந்த நாட்டை இணைக்கும் பசையாக ராமர் உள்ளார் என்றும் தமிழ்நாடு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில், "ஸ்ரீராமரும் தமிழகமும் இணைப்பிரியா பந்தம்" என்கிற நூலை தமிழ்நாடு ஆளுனர் ஆர். என். ரவி இன்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஹண்டே, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய ஆளுநர் ரவி, "ராமர்கோவில் கும்பாபிஷேகம் போது நாடே ராமரின் பக்தியில் மூழ்கி இருந்தது. அப்போது தமிழ்நாட்டில் ராமர் வடமாநில கடவுள். தமிழ்நாடு மக்களுக்கு தெரியாது என்ற கருத்தை கட்டமைத்தனர்.
சமூக ஊடகங்களில் இது போன்ற கருத்துக்களால் இளைஞர்கள் நமது கலாச்சார, ஆன்மீக பாரம்பரியத்தை இழந்துள்ளனர். ஜோடிக்கப்படும் கருத்துக்களால் நமது கலாச்சாரம் இனப்படுகொலை செய்யப்படுகிறது. ராமர் எங்கும் உள்ளவர். அவரது தடங்கல் தமிழ்நாட்டில் உள்ளது. அனைவரது மனதிலும் ராமர் இருக்கிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த மாநிலத்தில் நடந்த மூன்று நிகழ்வுகளை நினைவுபடுத்த விரும்புகிறேன். பொன்னியின் செல்வன் முதல் பாகம் படம் வெளியான போது சோழர்கள் தான் பொதுவாக பேசப்பட்டனர். அப்போது சிவன் நமது கடவுள் இந்திய அளவிலான கடவுள் அல்ல.
ஏனென்றால் சோழர்கள் சிவனை வழிபட்டுள்ளனர் என பேசப்பட்டது. இரண்டாவதாக, படம் வெளியான கொஞ்ச நாளில் காசி தமிழ்ச் சங்கமம் நடைபெற்றது. அதிகளவிலான மக்கள் வரவேற்பின் காரணமாக அதிக மக்கள் கலந்துகொள்ள விண்ணப்பித்தனர். காசிக்கு தமிழிற்கும் உள்ள தொடர்பு குறித்து பேசப்பட்டது.
மூன்றாவதாக, சனதானத்திற்கு எதிராக சிலர் பேச ஆரம்பித்தனர். சனாதனத்தை டெங்கு, மலேரியா என பேசினர். அதன் பிறகு என்னமோ நடந்தது. திடீரென அமைதியாகி விட்டனர் சனாதனம் எதிராக குறித்து பேசுவதை நிறுத்திவிட்டனர்.
நாடு முழுவதும் பயணித்து மக்களுடன் சிறிது நேரம் ஒதுக்கினால் தெரியும் நாட்டின் ஒவ்வொரு இஞ்சிலும் ராமர் இருக்கிறார் என்று. பழங்காலத்தில் ராமரை மக்களின் மனதில் இருந்து நீக்க முடியவில்லை. ஏனென்றால், அவர் கோவிலில் வாழவில்லை. மக்களின் மனதிலும் நினைவிலும் ராமர் வாழ்ந்து வருகிறார்.
ராமரை நீக்க முடியாது. ஒருவேளை நீக்க முயற்சி செய்தால் பாரதம் இருக்காது. நாடும் இருக்காது. இந்த நாட்டை இணைக்கும் பசையாக ராமர் உள்ளார். மொழி, இனம் கடந்து ராமர் மக்கள் மனதில் உள்ளார். நாடு முழுவதும் ராமர் கதைகள் சொல்லப்பட்டு வருகிறது.
ஒவ்வொருவரின் கதைச் சொல்வதற்கு ஏற்ப சிறு வேறுபாடு இருக்கலாம். ஆனால், ராமர் நாடு முழுவதிலும் இருந்திருக்கிறார். தமிழ்நாடு அதற்கு விதிவிலக்கு அல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டை இணைக்கும் பசையாக ராமர் உள்ளார்.
பாரதம் என்பது தர்ம நாடு, தர்மத்தை நீக்கினால் பாரதம் இல்லை. சனதான தர்ம என்பது அனைவரையும் உள்ளடக்கியது. மற்றவர்கள் என்பதே சனாதானத்தில் இல்லை. ராமரை நீக்கினால் பாரதம் எனும் இந்த நாடு இல்லை" என்றார்.