“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
”கல்லூரி காலம் வரை நான் மின்சார விளக்கையே பார்த்தது இல்லை”
தமிழக இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், ’Think to Dare’ என்ற தலைப்பில் ராஜ்பவனில் இளம் சாதனையாளர்களை அழைத்து அவர்களின் உறுதியை மேலும் அதிகப்படுத்தும் வகையில் அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் நடத்தி வருகிறார். அந்த வகையில், இன்று நடைபெற்ற 17வது நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் சிறப்பு குழந்தையாக இருக்கும் மாணவி ஒருவர் ‘உங்களுடைய இன்ஸ்ப்ரேஷன் யார்?’ என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.
இன்ஸ்ப்ரேஷனை சொல்லும்போது உணர்ச்சிவசப்பட்ட ஆளுநர்
அவருக்கு பதிலளிக்கத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தான் ஒரு கிராமத்தில், சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்ததாகவும், தான் பள்ளிப் படிப்பை முடிக்கும் வகையில் மின்சாரத்தை பயன்படுத்தியதோ, மின்சாரம் மூலம் எரியும் விளக்குகளை பார்த்ததோ இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். தான் கல்லூரி சென்ற பிறகுதான் மின்சார பயன்பாடு பற்றி தனக்கு தெரிய வந்ததாக தெரிவித்த ஆளுநர், தன்னுடைய இன்ஸ்ப்ரேஷன் யார் என்பதையும் குறிப்பிட்டார்.
அம்மாவே முன்னோடி ; அவரே இன்ஸ்ப்ரேஷன்
அப்போது பேசிய அவர் ‘ என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் என்னுடைய தாயார் தான் என்று குறிப்பிட்டார். என் குடும்பத்திலேயே மிகச் சிறந்த கடின உழைப்பாளி என்னுடைய அம்மாதான். நான் படிக்கும்போது, கஷ்டப்படும்போது, சோர்வாக இருக்கும்போது என்னுடைய தாயை நினைத்துக் கொள்வேன். தொடர்ந்து அவர் எங்களுக்காக உழைத்ததால் அவர் பல நேரங்களில் சோர்வடைந்திருக்கலாம். ஆனால், ஒருபோதும் அதனை எங்களிடம் காட்டிக் கொண்டதே இல்லை. அவர் தான் எனக்கான இன்ஸ்ப்ரேஷன்’ என கூறியுள்ளார்.
சோர்வு வரும்போதெல்லாம் என் அம்மாவை நினைத்துக் கொள்வேன் – ஆளுநர் உருக்கம்
படிக்க வேண்டும், முன்னேறி வர வேண்டும் என்று உழைக்கும்போது எனக்கு சோர்வோ, மனதிட குறைவோ ஏற்பட்டால் என் அம்மா முகம்தான் என் மனதில் உதிக்கும். அவரை நினைத்துக்கொள்வேன். என் தாய் படும் கஷ்டங்களைவிட நான் என்ன பெரிய கஷ்டப்பட்டுவிட்டேன், இதெல்லாம் ஒரு கஷ்டமா? என்று தோன்றும். அவர் தான் என் தொடக்கக் காலம் முதல் இப்போது நான் ஆளுநராக இருக்கும் இந்த நொடி வரை எனக்கான முன்னுதாரணம், உந்துசக்தி, நீங்கள் கேட்ட அந்த இன்ஸ்ப்ரேஷன் என ஆளுநர் ரவி உணர்ச்சிவசப்பட்ட நிலையில், அந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
மிகப்பெரிய தலைவர்களில் ஒருவரில் யாரையோ ஆளுநர் தன்னுடைய முன்னுதாரணமாக மேற்கோள் காட்டப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், தன்னுடைய இன்ஸ்ப்ரேஷனாக அவருடைய தயாரை ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.