Jerusalem Pilgrimage: புனித பயணம் செல்ல 60ஆயிரம் ரூபாய்.! அள்ளிக்கொடுக்கும் அரசு- உடனே விண்ணப்பிக்க அழைப்பு
தமிழக அரசு பல்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் புனித பயணம் மேற்கொள்ளநிதி உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் பயணத்திற்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.

புனித பயணத்திற்கு நிதி உதவி
தமிழக அரசு, சமூக நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கான புனித பயணங்களுக்கு நிதி உதவி வழங்குகிறது. இந்துக்களுக்கான கைலாஷ்-மானசரோவர் மற்றும் முக்திநாத் பயண உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. சீனாவில் உள்ள கைலாஷ்-மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் புனித பயணங்களுக்கு அரசு மானியம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 250 பேருக்கு மானசரோவருக்கு மற்றும் 250 பேருக்கு முக்திநாத்திற்கு உதவி வழங்கப்படுகிறது.
ஒருவருக்கு 50,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. இஸ்லாமியர்களுக்கான ஹஜ் பயண உதவி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு ஹஜ் பயணத்திற்கான நிதி உதவி வழங்கப்படுகிறது. இது மத்திய அரசின் ஹஜ் கமிட்டி மூலம் செயல்படுத்தப்படுகிறது, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1000 பேருக்கு மானிய உதவி அளிக்கப்படுகிறது.
இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு நிதி உதவி
பௌத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்களுக்கான புனித பயண உதவி திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது. பௌத்தர்களுக்கு நாக்பூரில் உள்ள தீட்ஷபூமி பயணத்திற்கு ஆண்டுக்கு 150 பேருக்கு தலா 5,000 மானியம் வழங்கப்படுகிறது. ஜைனர்களுக்கு ரணக்பூர் அல்லது பிற இடங்களுக்கும், சீக்கியர்களுக்கு அமிர்தசரஸ் போன்றவற்றிற்கு இதே போன்ற உதவி தொகையானது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கிறிஸ்தவர்களுக்கான ஜெருசலேம் பயண உதவி திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இஸ்ரேல், எகிப்து, ஜோர்டானில் உள்ள புனித இடங்களுக்கான பயணத்திற்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 500 முதல் 600 பேருக்கு உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஜெருசலேம் புனித பயணம் செய்தவர்கள் உதவி தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஜெருசேலம் புனிதப் பயணத்திற்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 01-11-2025க்கு பிறகு ஜெருசேலம் சென்று புனிதப்பயணம் மேற்கொண்ட கிறித்துவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், இந்த உதவித்தொகை திட்டத்தில் கிறித்தவர்கள் ஒருவருக்கு தலா ரூ. 37,000/- நிதியுதவியும், கன்னியஸ்திரிகள் மற்றும் அருட்சகோதரிகளுக்கு தலா ரூ. 60,000/-நிதியுதவியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது www.bcmbcmw.tn.gov.in இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை கலச மகால், முதல் தளம் சேப்பாக்கம், சென்னை-600005
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-02-2026





















