New Chief Secretary: புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்.. தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..!
தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
![New Chief Secretary: புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்.. தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..! Tamil Nadu government has appointed Shivdas Meena as the new Chief Secretary of Tamil Nadu New Chief Secretary: புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்.. தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/29/adca44a342fef62eabccc368a14f17941688026404326589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டின் 49-வது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தலைமை செயலாளராக இருந்த இறையன்பு, 60 வயது பூர்த்தியடைந்ததை அடுத்து அவர் நாளை பணி ஓய்வு பெறுகிறார். இதனால் அடுத்த தலைமை செயலாளர் யார் என்ற கேள்வி நிலவி வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது சீனியாரிட்டி, பணி திறன் உள்ளிட்டவை கருத்தில் கொண்டு 13 பேரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றதாக கூறப்பட்டது. இதில் சிவ்தாஸ் மீனாவிற்கு புதிய தலைமை செயலாளராக நியமனம் செய்யப்படுவார் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. சிவ்தாஸ் மீனா கவனித்து வந்த நகராட்சி நிர்வாக துறை கார்த்திகேயனுக்கு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று சிவ்தாஸ் மீனா புதிய தலைமை செயலாளராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
யார் இந்த சிவ்தாஸ் மீனா?
சிவ்தாஸ் மீனாவின் பூர்வீகம் ராஜஸ்தான். இவர் ஜெய்ப்பூரில் சிவில் எஞ்ஜினீயரிங் படிப்பை முடித்தார். அதனை தொடர்ந்து ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். சிவ்தாஸ் மீனா 30 ஆண்டுகள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 செயலாளர்களின் ஒரு செயலாளராக இருந்தவர். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அவர் மத்திய துறைக்கு மாற்றப்பட்டார். மத்தியில் சுற்று சூழல் மற்றும் வனத்துறைக்கு கீழ், மாசு கட்டுப்பாடு மத்திய பிரிவின் தலைவராக இவர் பணியாற்றி வந்தார்.
அதன் பின் 2021 ஆம் ஆண்டு மீண்டும் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்பட்டார். திமுக ஆட்சியில் அவர் நகராட்சி நிர்வாக துறை செயலாலராக பதவி வகித்து வந்தார். கடுமையான சூழ்நிலைகளிலும் இவர் திறம்பட செயல்படக்கூடியவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் நாளையுடன் தற்போதைய தலைமை செயலாளர் இறையன்பின் பதவி நிறைவு பெறுவதால், தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமணம் செய்யப்பட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)