Ration card : ரேஷன் கார்டு ரெடி.! வீடு தேடி வரும் 46,000 ஸ்மார்ட் கார்டு- உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவிப்பு
New Ration card : புதிய ரேஷன் கார்டு கேட்டு சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 46ஆயிரம் ரேஷன் கார்டுகள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

ரேஷன் கார்டுகள் பயன்கள்
ஏழை மற்றும் எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் நியாயவிலைக்கடைகள் மூலம் இலவசமாகவும், மானிய விலையிலும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 916 நியாய விலை கடைகளில் உள்ள 2 கோடியே 28 லட்சத்து 12,942 ரேஷன் கார்டுகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. அதே நேரம் ரேஷன் கார்டுகள் உணவு பொருட்களை வாங்குவதற்கான ஆவணங்களாக மட்டுமில்லாமல், அரசின் உதவிகளை பெற அடையாள அட்டையாக உள்ளது. அந்த வகையில், இயற்கை பேரிடர் காலங்களில் அரசால் வழங்கப்படும் நிவாரண உதவிகளைப்பெறவும் ரேஷன் கார்டு முக்கிய ஆதாரமாக உள்ளது.
அரசின் உதவிகளை பெற உதவும் ரேஷன் கார்டுகள்
மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறவும் ரேஷன் அட்டை கட்டாயமாகும். இது மட்டுமில்லாமல் அரசின் சார்பாக வழங்கப்படும் மகளிர் உரிமை தொகை பெறவும் ரேஷன் கார்டு கட்டாய ஆவணமாக உள்ளது. எனவே ரேஷன் கார்டை பெற பல லட்சம் பேர் விண்ணப்பித்து காத்துள்ளனர். அந்த வகையில் ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக்கதில் சட்டமன்ற தேர்தல் பணிகள் காரணமாக ரேஷன் கார்டுகள் அச்சிடும் மற்றும் விநியோகிக்கும் பணியானது பாதிக்கப்பட்டது.
தயார் நிலையில் 46 ரேஷன் அட்டைகள்
அந்த வகையில், எப்போது புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள தகவலில், தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் 2 லட்சத்து 25 ஆயிரம் புதிய ரேஷன் அட்டை வேண்டி விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில், முதற்கட்டமாக 46 ஆயிரம் ரேஷன் அட்டைகள் அச்சிடப்பட்ட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஒரு சில நாட்களில் புதிய ரேஷன் அட்டை விநியோகம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிப்படியாக தகுதியான அனைவருக்கும் ரேஷன் அட்டை விநியோகம் செய்யப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே முதலமைச்சர் விஜய் புதிய ரேஷன் அட்டை விநியோகத்தை தொடங்கி வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















