கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி அளிக்கும் சிறுவர்களுக்கு திருக்குறள் பரிசு - முதல்வர் அறிவிப்பு
தமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
2020 ஆம் ஆண்டு மத்தியிலிருந்தே, அனைத்து முக்கிய சர்வதேச தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன், மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பைசர், ஜே அண்டு ஜே மற்றும் மாடர்னா போன்ற நிறுவனங்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. அந்த நிறுவனங்கள் இந்தியாவில் தடுப்பூசிகளை விநியோகிக்கவும் மற்றும் இந்தியாவில் அவர்களின் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவும் அனைத்து உதவிகளை மத்திய அரசு வழங்கியது.
கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி அளிக்கும் சிறுவர்களுக்கு திருக்குறள் பரிசு - முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதிகள் போன்ற காரணங்களுக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்க வேண்டும் என்று புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க, தொழில் அதிபர்கள், அரசியல் கட்சிகள், தலைவர்கள், பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து நிதி அளித்து வருகின்றனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி மாணவர்கள் தாங்கள் உண்டியலில் சேர்த்த சிறு சேமிப்புகளையும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வருகின்றனர். அந்த குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பேரிடரின் தாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைத்து தரப்பினரும் தாராள நிதி வழங்க உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன். அதனை ஏற்று பெரும் தொழிலதிபர்கள், நடுத்தர, சிறு, குறு தொழில் நடத்துவோர், திரையுலகினர், சமூகத்தில் வசதி படைத்தவர்கள் முதல் ஏழை, எளிய சாமான்ய மக்கள் வரை அனைத்து தரப்பினரும், பெருந்தொற்றை முறியடித்தே தீர வேண்டும் என்ற பேரார்வத்துடனும், பேரன்புடனும் தங்களால் இயன்ற நிதியை இன்முகத்துடன் வழங்கி வருகிறார்கள் என்பதை அறிவீர்கள். இதில், தங்களின் சின்னஞ்சிறு கனவுகளை அடைவதற்காக சிறுகச்சிறுகச் சேமித்து வைத்திருக்கும் சேமிப்பை வழங்க முன்வரும் பிஞ்சு உள்ளங்களின் பெருங்கருணை, என் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. எனவே, கொரோனா துயர் துடைக்க முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக தங்கள் சேமிப்பை வழங்க முன்வரும் சிறார்கள், சிறுமியர்கள் உள்ளிட்ட பிள்ளைச் செல்வங்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில், உலகப் பொதுமறை திருக்குறள் நூல் ஒன்று அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவிக்கிறேன். திருவள்ளுவரின் குறள் நெறிக்கு இணங்க, இளம் உள்ளங்களில் ஈகைப் பண்பையும், சக மனிதர்களையும் நேசிக்கும் அன்புணர்வையும் விதைத்திடும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 32 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று: தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் 36 ஆயிரத்திற்கும் அதிகமான அளவில் பதிவாகி வந்த நிலையில், முழு ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. நேற்று 33 ஆயிரம் என்ற அளவில் பதிவாகிய கொரோனா பாதிப்பு இன்று 31 ஆயிரத்து 709 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 9 ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 96 ஆயிரத்து 706 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்த சென்னை மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து 2 ஆயிரத்து 762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் மொத்தம் 28 ஆயிரத்து 317 நபர்கள் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 498 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையில் ஆண்கள் மட்டும் 11 லட்சத்து 87 ஆயிரத்து 314 ஆகும். பெண்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 22 ஆயிரத்து 348 நபர்கள் ஆகும். மூன்றாம் பாலினத்தவர்கள் 38 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இன்று குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 255 ஆக உயர்ந்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து சிகிச்சை பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 74 ஆயிரத்து 539 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று 474 நபர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில் இன்று மட்டும் கொரோனா வைரஸ் காரணமாக 486 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று உயிரிழந்தவர்களில் 224 பேர் தனியார் மருத்துவமனையிலும், 262 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதனால், தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 775 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா தொற்று காரணமாக 6 ஆயிரத்து 831 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 117 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள் ஆவர்.




















