"வளர்ச்சியின் அடையாளமாக தொழில் நிறுவனங்கள் இருக்கிறது" முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!
தமிழ்நாட்டில் நிம்மதியாக தொழில் நிறுவனத்தை நடத்தலாம் என்ற நம்பிக்கை தொழிலதிபர்களுக்கு வந்திருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, மற்றும் வர்த்தகத்துறை சார்பில் இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், "தமிழ்நாட்டின் தொழில்துறை வரலாற்றிலும், வளர்ச்சி வரலாற்றிலும் இது மிக மிக முக்கியமான நாள். நம்முடைய பொருளாதாரத் திறனை உலகிற்கு எடுத்துக் காட்டும் நாளாகவும், தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை உணர்த்தும் நாளாகவும் இந்த நாள் அமைந்திருக்கிறது.
லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு:
கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியிருக்கிறோம். மாநாடுகளை நடத்துவதைவிட, அந்த மாநாடுகள் மூலமாக எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தோம் என்பதில்தான், வெற்றி அடங்கியிருக்கிறது.
அந்த மாநாடு மூலமாக நாம் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 631. ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் மதிப்பு 6.64 லட்சம் கோடி ரூபாய். இதன் மூலமாக 14 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 12 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்" என்றார்.
தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால், கடந்த மூன்று ஆண்டுகளில், 31 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், 9 லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம்.
தொழில் வளர்கிறது; தமிழ்நாடு வளர்கிறது:
MoU போடுவதோடு நம்முடைய கடமை முடிந்துவிட்டது என்று இருந்துவிடாமல், அந்தத் தொழில்களை நிறுவுவதற்கு தேவையான ஆதரவு சேவைகளை அளித்துக் கொண்டு வருகின்றோம். அதன் முன்னேற்றத்தையும் தொடர்ந்து கண்காணித்து, அந்தத் திட்டங்கள் விரைந்து செயலாக்கப்படுவதை நம்முடைய அரசு உறுதி செய்து கொண்டிருக்கிறது.
இதை ஏதோ கடமையாக மட்டும் கருதாமல், தன்னார்வத்துடன் செயல்படுத்திக் காட்டி வரும் மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அவர்களுக்கும், தொழில் துறை அதிகாரிகளுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்.
இதன் தொடர்ச்சியாக சில திட்டங்களை துவக்கி வைக்கவும், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் நான் வந்திருக்கிறேன். 19 வகையான திட்டங்களை இன்றைக்கு தொடங்கி வைத்திருக்கிறேன். 17 ஆயிரத்து 616 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டங்கள் மூலமாக, 64 ஆயிரத்து 968 பேருக்கு வேலைகள் கிடைக்கப் போகிறது.
28 வகையான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். இதன் மொத்த முதலீட்டு மதிப்பு 51 ஆயிரத்து 157 கோடி ரூபாய். இதன் மூலமாக, 41 ஆயிரத்து 835 பேருக்கு வேலைகள் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொழில் வளர்கிறது என்றால், அந்த நிறுவனம் மூலமாக, மாநிலம் வளர்கிறது; கிடைக்கும் வேலைவாய்ப்புகள் மூலமாக குடும்பங்களும் வளர்கிறது; வாழ்கிறது! அந்த வகையில், வளர்ச்சியின் அடையாளமாக தொழில் நிறுவனங்கள் இருக்கிறது.
அமைதியான சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் மாநிலத்தை தேடித்தான் தொழில்துறையினர் வருவார்கள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
தமிழ்நாட்டில் நிம்மதியாக தொழில் நிறுவனத்தை நடத்தலாம் என்ற நம்பிக்கை தொழிலதிபர்களுக்கு வந்திருக்கிறது. அதன் அடையாளமாகத்தான், ஏராளமான தொழிற்சாலைகள் கடந்த மூன்றாண்டுகளாக தமிழ்நாட்டில் உருவாகி வருகிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" என்றார்.