மாணவர்கள் தற்கொலை: மரண அமைதி காத்து ஆட்சி நடத்தியது அதிமுக - முதல்வர் ஸ்டாலின்
நீட் தேர்வால் மாணவர்கள் மடிந்தபோது மரண அமைதி காத்து ஆட்சி நடத்தியது அ.தி.மு.க.தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று பேசியுள்ளார்.
மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு கோரும் தீர்மானத்தை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த தீர்மானம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியதாவது,
“நீட் தேர்வைத் தடுத்து நிறுத்தி, 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை மருத்துவக் கல்வியில் சேர்த்தவர் கலைஞர். ஏன், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாகூட நீட் தேர்வை நடத்த அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய இவர், முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தமிழ்நாட்டில் முதன்முதலில் நடத்தப்பட்டது.
எடப்பாடி ஆட்சியிலே :
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்று இதே சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா நிராகரிக்கப்பட்டதும், எதிர்க்கட்சித் தலைவரான இவர், முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட்தேர்வு தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று இதே சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா நிராகரிக்கப்பட்டதும், எதிர்க்கட்சித் தலைவரான இவர் முதலமைச்சராக இருந்தபோதுதான்.
நீட் தேர்வு அச்சத்தில் அனிதா உள்பட மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது உங்கள் ஆட்சியில்தான். குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நீட் மசோதாவை இந்த அவைக்குச் சொல்லாமல் மறைத்ததும் அ.தி.மு.க. ஆட்சிதான. அதாவது, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான். இப்போது உயிரழந்த மாணவர் தனுஷ் இருமுறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதுதான்.
மரண அமைதி :
ஒன்றிய அரசுடன் கூட்டணியாக இருந்தீர்கள். இப்போதும் இருக்கிறீர்கள். சி.ஏ.ஏ. மற்றும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக ஓட்டுப் போட வேண்டும் என்ற நிலை வந்தபோது, பா.ஜ.க. கூறியபோது, நீட் தேர்விற்கு விலக்கு தர வேண்டுமென்று அ.தி.மு.க. நிபந்தனை விதித்து இருக்கலாம். அந்தத் தெம்பு, திராணி அ.தி.மு.க.-விற்கு இல்லை. அதைச் செய்திருந்தால், நீட் தேர்வுக்கு ஓரளவிற்கு விலக்கு கிடைத்திருக்கும். ஆனால், நீட் தேர்வால் மாணவச் செல்வங்கள் மடிந்தபோது மரண அமைதி காத்து, ஆட்சி நடத்தியதுதான் அ.தி.மு.க.
ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சட்ட மசோதாவை இன்று நான் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். ஆகவே, நீட் தேர்வை ரத்து செய்து, 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் மாணவர்களை சேர்க்க இந்த அரசு அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.”
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசை குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டிருப்பதற்கு தி.மு.க. அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.