MK Stalin Health Updates: ராமச்சந்திராவில் முதல்வர் ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை!
ஆண்டுக்கு இரண்டு முறை மேற்கொள்ளப்படும் பரிசோதனையை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
கடந்த மே 7ஆம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றதும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அத்துடன், கொரோனா தொற்று நோயை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்பலனாக, மே மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!
தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு ஒரே மாதிரியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டன. மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதுதொடர்பாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று காலை எங்கள் மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனை நடைபெற்றதாகவும், ஆண்டுக்கு இரண்டு முறை மேற்கொள்ளப்படும் பரிசோதனையை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.