CM Stalin: இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்.. மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..
மும்பையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.
2014-ஆம் ஆண்டு, 2019-ஆம் ஆண்டு என நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக 9 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி பா.ஜ.க. அசுர பலத்தில் உள்ளது. இச்சூழலில், இன்னும் 9 மாதங்களில் அடுத்த மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க தனது வெற்றியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. அதே சமயம் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்து களம் இறங்கியுள்ளனர்.
முதல் முறையாக ஜூன் மாதம் 23-ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது கூட்டம் பெங்களூரில் கடந்த மாதம் 17 மற்றும் 18- ஆம் தேதி நடைபெற்றது. இரண்டு நாள் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விஷயங்களை குறித்து விவாதிக்கப்பட்டது. முக்கியமாக இந்த எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு ‘ I.N.D.I.A’ - இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி என பெயர் சூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் அனைவரும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். குறிப்பாக பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான இந்த கூட்டம் எதற்காக நடத்தப்படுகிறது? ஏன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
#WATCH | Tamil Nadu CM and DMK leader MK Stalin leaves from Chennai to attend the third meeting of the Opposition bloc, Indian National Developmental Inclusive Alliance (INDIA), in Mumbai. pic.twitter.com/ueFjdJKNfZ
— ANI (@ANI) August 31, 2023
இந்நிலையின் இன்று மும்பையில் மூன்றாவது கூட்டம் நடைபறுகிறது. இரண்டு நாள் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் இருந்து மும்பைக்கு புறப்பட்டுச் சென்றார். சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார், இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு, சின்னம் குறித்து விவாதிக்கப்படும் எனவும், தற்போது இருக்கும் கட்சிகள் தவிர வேறு சில கட்சிகளும் I.N.D.I.A. கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியா என்னும் எதிர்க்கட்சி கூட்டணியின் மும்பை கூட்டத்திற்கு 5 மாநில முதல்வர்கள் மற்றும் 26 கட்சிகளின் சுமார் 80 தலைவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை பிற்பகல் 2 மணியளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கான லோகோ வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.