Annamalai : “தி.மு.க.வின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தோல்வி” - தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை
தி.மு.க.வின் இந்தி திணிப்பு போராட்டம் தோல்வி அடைந்துள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாளையொட்டி, தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்களுக்கு , தி மு க ஆட்சியின் மீது இப்போதெல்லாம் மிகுந்த கோபம் வருவதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “அடித்தட்டு மக்கள் தங்களுக்கு இந்த ஆட்சியினால் எந்த பயனும் இல்லை என்கின்ற எண்ணம் வருகின்றதோ, அப்போதெல்லாம் தி மு க கையில் எடுக்கும் ஒரே ஆயுதம் இந்தி திணிப்பு என்பதுதான். பல ஆண்டுகளாக இதைத்தான் பார்த்து வருகிறோம் என பேசினார். திமுகவின் புதிய கல்வி கொள்கை குறித்து பேசிய அவர், தமிழகத்தில் இருக்கும் அரசு பள்ளியில் கூட தமிழ் மொழியைக் கட்டாயப்பாடமாக திமுகவால் மாற்ற முடியவில்லை அதற்கு கூட பிரதமர் நரேந்திர மோடியின் உதவி அவர்களுக்கு தேவைபட்டது. மேலும், 6ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியைக் கட்டாயப்பாடமாக புதிய கல்வி கொள்கை மூலம் கொண்டு வந்திருக்கிறோம். அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கூட திமுகவிற்கு இல்லை” என சாடினார்.
திமுகவின் ஆர்பாட்டம் குறித்து அண்ணாமலையின் கருத்து:
இந்தி திணிப்பு குறித்து அண்ணாமலை பேசுகையில், மத்திய அரசில் பணிபுரியும் கடைநிலை ஊழியர் ஒருவருக்கு இந்தியில் யாராவது கடிதம் எழுதினால் அதை வைத்து திமுக அரசியல் செய்வதாகவும், இதைவைத்து பத்து ஆண்டு காலமாக திமுக அரசியல் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை இந்தியா மட்டுமல்லாது தமிழகத்திலும் ஆங்காங்கே மக்கள் அதனை ஏற்றுக் கொண்டுவிட்டதாக கூறிய அவர், தி மு கவின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தோல்வி அடைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், ஐஐஎம், ஐஐடியில் இந்தி கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசின் அறிக்கையை முதலமைச்சர் காட்ட வேண்டும் எனவும் கூறினார்.
திமுகவின் இந்தி திணிப்பிற்கு எதிரான ஆர்பாட்டம்:
முன்னதாக, இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞர் அணி- மாணவர் அணி சார்பில், இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க. இளைஞரணி ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், சமூக வலைதளமான ட்விட்டரில் Stop Hindi Imposition என்ற ஹேஸ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
இதனிடையே சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் மாணவர் அணி செயலாளர் எழிலரசன், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
உதயனிதி ஸ்டாலின்:
இந்தி திணிப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தற்போது நடக்கும் ஆட்சி என்பது நீங்கள் நினைக்கும் எடப்பாடி ஆட்சி அல்ல , தளபதி மு.க ஸ்டாலின் ஆட்சி. இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், நீங்கள் மீண்டும் இந்தி திணிப்பை கொண்டு வந்தால் , தளபதி அவர்களின் ஆணை பெற்று டெல்லியில் வந்து போராட்டம் நடத்துவோம் எனப் பேசினார்.