TN Assembly Session: ஜூன் 20 முதல் 29 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் - சபாநாயகர் அறிவிப்பு
TN Assembly Session: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20 முதல் 29 வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
TN Assembly Session: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஜூன் 24ம் தேதிக்கு பதிலாக ஜுன் 20ம் தேதியே தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அப்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கும் எனவும், எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் குழு கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கபப்டும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜுன் 20ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஜுன் 29ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, சட்டமன்ற கூட்டத்தொடர் முன்கூட்டியே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சட்டப் பேரவை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை, 2024-ஆம் ஆண்டு, ஜூன் திங்கள் 24-ஆம் நாள், திங்கட்கிழமை. காலை 10.00 மணிக்கு, சென்னை- 600 009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் கூட்டியுள்ளார்கள்” என கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடர் ஜுன் 20ம் தேதி தொடங்கும் எனவும், 29ம் தேதி நிறைவடையும் என்றும் அடுத்தடுத்த அறிவிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்:
நடப்பாண்டிற்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் மற்றும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு பேரவையில்13-ம் தேதி இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தொகுதி மறுசீரமைப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த 2 அரசினர் தனி தீர்மானங்கள் 14-ம் தேதி நிறைவேற்றப்பட்டன. ஆளுநர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் 15-ம் தேதி பதிலுரை அளித்தார். பொது பட்ஜெட் 19-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் 20-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. பட்ஜெட்கள் மீதான விவாதம் 21-ம் தேதி நடந்தது.
அதற்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று பதில் அளித்தனர். இதையடுத்து, பேரவையை ஒத்திவைப்பதற்காக அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்த தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக பேரவை தலைவர் அப்பாவு அறிவித்தார்.
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கான, கூட்டத்தொடர் கூடாமலேயே இருந்தது. இந்நிலையில், தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக வரும் 20ம் தேதி சட்டப்பேரவை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.