TN Assembly Session: “ஆளுநர் உரை, நமத்துபோன பட்டாசு” - பாஜக தலைவர் அண்ணாமலை காட்டம்
அரசியல் கட்சி தலைவர்கள் ஆளுநரின் உரைக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது. அம்மா கிளினிக் மூடல், அம்மா பல்கலைக்கழகம் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள் ஆளுநரின் உரைக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “மரபின் முறைப்படி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் போது மாநில ஆளுநரின் உரையுடன் சட்டமன்றம் தொடங்குவது காலம் காலமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் கவர்னர் உரை எப்போதும் ஆளும் அரசினால் தயாரிக்கப்பட்டு, பொதுவாக ஆளும் கட்சியின் அரசியல் அறிக்கையாகவே மாநில் ஆளுநரால் வாசிக்கப்படும்.
ஆகவே ஆளும்கட்சியின் வருங்கால் திட்டங்களின் வடிவங்கள் வெளியிடப்படுவதால் ஒவ்வொரு முறையும் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும். போது கவர்னரின் உரைக்கு கூடுதல் எதிர்பார்ப்பும் ஆர்வமும் கூடியிருக்கும். ஆனால் தமிழக ஆளுநர் வாசிக்க அளித்த ஆளும்கட்சியின் உரை, அரசையும் முதல்வரையும் பாராட்டும் வாழ்த்துரையாக மட்டுமே அமைந்துவிட்டது.
புதிய திட்டங்கள் இல்லை. புதிய செயல் வடிவங்கள் இல்லை. புதிய அறிவிப்புகள் இல்லை. மத்திய அரசிடம் இணைந்து செயலாற்றும் செயல் திட்டங்கள் இல்லை.. புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இல்லை. வருவாயைப் பெருக்கும் வழிமுறைகள் யோசிக்க படவில்லை. செலவினங்களை குறைக்கும் செயல்முறைகள் வகுக்கப்படவில்லை. சிறு தொழில் நிறுவனங்களை வளர்த்தெடுக்கவும், விவசாயிகளை மீட்டெடுக்கவும், பெண்களை முன்னேற்றவும், வணிகர்களை மேம்படுத்தவும், எந்த புதிய அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திமுக-வினர் விடாமல் பேசிப் பேசி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும், அதே இரு மொழிக் கொள்கை, அண்டை மாநிலங்களுடன் பேணும் உரிமை, இலங்கை தமிழரின் நலம் காப்பது, சமூக நீதி, முல்லைப் பெரியாறு அண்ணா மறுமலர்ச்சி திட்டம் என்று அரைத்த மாவையே அரைத்து இருக்கிறார்கள். அப்ப இத்தனை ஆண்டுகளாக மக்களுக்கு அறிவாலயம் அரசு செய்தது என்ன?
உலக நாடுகள் மொத்தமும் செய்வதறியாது கைகளை பிசைந்து கொண்டிருந்த போது ஒற்றை மனிதராய் தொலைநோக்குப் பார்வையுடன் சொந்த நாட்டிலேயே தரமான தடுப்பூசி தயாரித்து, நம் நாட்டிற்கு 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் அன்னிய செலாவணியை இழப்பீடு இல்லாமல் காப்பாற்றி, நாட்டு மக்கள் அனைவரையும் தடுப்பூசிகள் போட வைத்த மத்திய அரசின் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களையும் பாராட்ட மனமின்றி, தடுப்பூசி போட வைத்த தமிழ் மகனே என்று தமிழக முதல்வர் தன்னைத் தானே பாராட்டிக் கொள்வது நகைப்பிற்கு இடமானது.
பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம், மீட்கப்பட்ட கோயில் நிலங்களுக்கு தங்களைப் பொறுப்பாகி அதற்கும் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளும் பெருந்தன்மையை கண்டு மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்,
இதில் மத்திய அரசுக்கு ஆலோசனைகள் வேறு, தமிழக மீனவர்களை மீட்க வேண்டும், மேகெதாட்டு அணையைக் கட்டக் கூடாது, ஜிஎஸ்டி இழப்பீடு 2024 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க வேண்டும், போன்ற ஆலோசனைகள் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இது வரை இருந்த ஆதிமுக ஆட்சியில் இல்லாது உங்கள் ஆட்சியில் மட்டும் மீனவர்கள் இலங்கையில் மாட்டுவதன் மர்மம் என்ன. காவிரி நதி நீர் ஆணையம் தலையிட்டு தடுத்த பின்னும் மேகதாது குறித்து பேசுவதில் அர்த்தம் என்ன?
சட்ட மன்றத்தின் ஆளுனர் உரை, மக்களுக்கான உரையாக இருக்க வேண்டுமே தவிர, அரசியலாக அமையக்கூடாது. ஆக மொத்தத்தில் ஆளுனர் அவர்களின் உரை நமத்துப்போன பட்டாசாக நம் மாநிலத்திற்கு ஏமாற்றம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்