TN Weather Update: சுட்டெரிக்க காத்திருக்கும் வெயில்! நேற்று 109 டிகிரி பாரன்ஹீட்.. இன்று எவ்வளவு தெரியுமா..?
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக அனேக இடங்களில் நல்ல மழை பெய்து வந்த நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் மோக்கா புயல் உருவானது. இந்த புயல் வங்க தேசம் மற்றும் மியான்மர் இடையே அதி தீவிர சூறாவளி புயலாக கரையை கடந்தது. இந்த புயலானது காற்றில் இருக்கும் ஈரப்பதம் இழுத்து சென்றுள்ளதால் வறண்ட காற்று நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கத்திரி வெயிலின் போது இயல்பைவிட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் நேற்று தமிழ்நாட்டில் சுமார் 20 மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 42.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 2017 ஆம் ஆண்டிற்கு பின் சென்னையில் 42 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 41.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையில் இந்த ஆண்டின் அதிகப்படியான வெப்பநிலை இதுவே ஆகும் என தெரிவித்துள்ளனர்.
அதிகபட்ச வெப்பநிலை :
17.05.2023 & 18.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 42.7 டிகிரி செல்சியஸ் (108.86 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து வேலூரில் 42.2 டிகிரி செல்சியஸ் (107.96 டிகிரி பாரன்ஹீட்), திருத்தணியில் – 41.8 டிகிரி செல்சியஸ் (107.24 டிகிரி பாரன்ஹீட்), புதுச்சேரியில் - 41.2 டிகிரி செல்சியஸ் (106.16 டிகிரி பாரன்ஹீட்), கரூர் பரமத்தியில் - 41.5 டிகிரி செல்சியஸ் (106.7 டிகிரி பாரன்ஹீட்), ஈரோடு - 40.6 டிகிரி செல்சியஸ் (105 டிகிரி பாரன்ஹீட்), கடலூர் - 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்), மதுரை 40.8 டிகிரி செல்சியஸ்(104.8 டிக்ரி பாரன்ஹீட்), பரங்கிப்பேட்டை - 40.7 டிகிரி செல்சியஸ் (105.2 டிகிரி பாரன்ஹீட்), திருச்சி - 40.3 டிகிரி செல்சியஸ் (104.54 டிகிரி பாரன்ஹீட்), நாகை - 39.6 டிகிரி செல்சியஸ் (103.28 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இந்த மாதம் இறுதி வரை கத்திரி வெயில் இருக்கும் என்பதால் இனி வரும் நாட்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என கூறப்பட்டாலும், அடுத்த சில தினங்களுக்கு சூரியன் சுட்டெரிக்கும் என்பது தான் நிதர்சனம்.