ஆடி மாத கொண்டாட்டம்.. தங்கதேரில் பவனி வந்த மாரியம்மன்... கரூரில் குவிந்த பக்தர்கள்..!
ஆடி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அம்மன் ஆலயங்களில் செவ்வாய், வெள்ளி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது.
கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு திருமணஞ்சேரி ஸ்ரீ உத்வாத நாதர், ஸ்ரீ கோகிலாம்பாள் அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார்.
ஆடி மாதம் என்றாலே அம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் திருமணஞ்சேரி ஸ்ரீ உத்வாத நாதர், ஸ்ரீ கோகிலாம்பாள் அலங்காரத்தில் மூலவர் வேம்பு மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வேம்பு மாரியம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு திருமணஞ்சேரி ஸ்ரீ உத்வாத நாதர், ஸ்ரீ கோகிலாம்பாள் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்காக சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் தங்க தேரோட்டம்.
தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான கரூர் மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன் தங்க தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. மூலவர் மாரியம்மனுக்கும் , உற்சவர் மாரியம்மனுக்கும் பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தங்க ரத வாகனத்தில் மாரியம்மனை கொலுவிருக்க செய்தனர். மாரியம்மனுக்கு ஆலயத்தின் பூசாரி தூப தீபங்கள் காட்டிய பின் மகா தீபாராதனை காட்டினார். ஸ்வாமி தங்க தேரோட்டம் ஆலயம் வளம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான ஆன்மீக பக்தர்கள் வழி எங்கிலும் காத்திருந்து தங்க தேரோட்ட நிகழ்ச்சியை கண் குளிர கண்டு மகிழ்ந்தனர். மாரியம்மன் ஆலய பரம்பரை அறங்காவலர் உள்ளிட்ட பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆடி மாச சங்கடகர சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை.
தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வைத்திருக்கும் மூலவர் கணபதிக்கும் உற்சவர் கணபதிக்கும் ஆடி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி பால், தயிர்,பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அரிசி மாவு, பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஸ்வாமிகளுக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. ஆலய அர்ச்சகர் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
Join Us on Telegram: https://t.me/abpdesamofficial