AIADMK: ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ்; இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ்தான்.. அதிமுக பொதுக்குழு செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியாகியிருக்கிறது.
மேலும் பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த அத்தனை மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷி கேஷ்ராய் அமர்வு முன்னதாக அளிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர். இந்த தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம் அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலான அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கியும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்.
அதிமுக பொதுக்குழு வழக்கின் பின்னணி
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வந்த நிலையில், அவ்வப்போது எழுந்த ஒற்றைத் தலைமை பிரச்சனை கடந்தாண்டு ஜூன் மாதத்தில் விஸ்வரூபம் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி உட்பட அவரது ஆதரவாளர்களை நீக்கி ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டார்.
மாறுபட்ட தீர்ப்பு
இந்த சூழலில் பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இதில் முதலில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக வந்தது. ஆனால் அதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தது.
உச்சநீதிமன்றத்தை நாடிய ஓபிஎஸ்
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தை நாடினார். இதன் வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் வழக்கில் விசாரணை நடந்தது. இதில் ஓபிஎஸ் தரப்பில் பல வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது. பின்னர் ஒருவாரம் கழித்து மீண்டும் ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் விசாரணை நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷி கேஷ்ராய் ஜனவரி 16 ஆம் தேதிக்குள் இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமாக மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இதனையடுத்து ஓபிஎஸ் தரப்பு ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்த நிலையில், இபிஎஸ் தரப்பில் 39 பக்கங்கள் கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் இவ்வழக்கில் இனி தீர்ப்பு மட்டுமே வெளியாக வேண்டும் என்ற நிலை இருந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.