SC Tasmac Case: என்ன நெனச்சிட்டு இருக்கீங்க? சந்தேகம் வந்தா போதுமா? அமலாக்கத்துறையை சாடிய உச்சநீதிமன்றம்
SC Tasmac Case: அமலாக்கத்துறை என்ன நினைத்துக் கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது? என, டாஸ்மாக் வழக்கில் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

SC Tasmac Case: அமலாக்கத்துறையின் நடவடிக்கை கூட்டாட்சி நடவடிக்கைக்கு எதிரானது இல்லையா? என, டாஸ்மாக் வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உச்சநீதிமன்றம் கண்டனம்:
டாஸ்மாக் முறைகேடு வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “அமலாக்கத்துறை என்ன நினைத்துக் கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது? சந்தேகம் இருந்தாலே அரசு அலுவலகத்திற்குள் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் செல்வீர்களா? முறைகேடு நடந்து இருந்தால் குறிப்பிட்ட அதிகாரியிடம் தானே விசாரணை நடத்தி இருக்க வேண்டும்? அமலாக்கத்துறையின் நடவடிக்கை கூட்டாட்சி நடவடிக்கைக்கு எதிரானது இல்லையா?” என தலைமை நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
வழக்கு விசாரணை காரசார வாதம்:
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “இது டாஸ்மாக் வழக்கு அரசு நிறுவனத்தில் எப்படி சோதனை நடத்தலாம்? நாங்கள்தான் அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டோம். ஆனால், நிர்வாக இயக்குநர்கள் மீது சோதனை நடத்தப்படுகிறது. FIR வந்ததும்.. ECIR உள்ளது. எந்த நேரத்திலும் இந்த விஷயத்தை முடிக்க முடியும். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை நாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அங்கு அமலாக்கத்துறை என்ன செய்கிறது? அமலாக்கத்துறை கணினிகளை பறிமுதல் செய்துள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது என வாதாடினார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு, ” டாஸ்மாக்கில் பெரிய அளவிலான முறைகேடுகள் குறித்து 47 முதல் தகவல் அறிக்கைகள் உள்ளன. நாங்கள் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் திட்டமிட்டு செய்யப்பட்ட குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த அதிகாரிகள் அனைவருக்கும் பணம் எவ்வாறு பாய்கிறது என்பதற்கான விவரங்கள் தெரியும். இது மிகப்பெரிய அளவிலான ஊழல் என்பதை அவர்களின் முதல் தகவல் அறிக்கைகளே உறுதி செய்கின்றன. மாநில அரசின் கோரிக்கையை ஏற்றால் பணமோசடியில் ஈடுபடும் அனைத்து அரசு ஊழியர்களும் PMLA-விலிருந்து விலக்கு பெறுவார்கள். மதுபான கடைகளில் மோசடி நடைபெறுகிறது. அவர்களை மாநில அரசு காப்பாற்றுகிறது” என வாதிட்டார்.
தலைமை நீதிபதி காட்டம்:
இருதரப்பு வழக்கறிஞர்களும் பரபரப்பான வாதங்களை முன்வைத்தபோது குறுக்கிட்டு பேசிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “ டாஸ்மாக் முறைகேடு வழக்கை உள்ளூர் காவல்துறையால் கையாள முடியாதா? அரசு தான் நடவடிக்கை எடுத்துள்ளதே? கடந்த ஆறு ஆண்டுகளில் நான் பல அமலாக்கத்துறை வழக்குகளை பார்த்து இருக்கிறேன். திரும்ப திரும்ப சொல்லும் வார்த்தைகளை நான் மீண்டும் சொல்ல விரும்பவில்லை. ஒரு வழக்கை விசாரிக்கும் அரசின் உரிமையை இது மீறவில்லையா? அரசு விசாரிக்கவில்லை என்று உங்களுக்கு சந்தேகம் ஏற்படும் போதெல்லாம் நீங்கள் அங்கு செல்வீர்களா? போட்டி விவாதம் இங்கே தேவையில்லை, கூட்டாட்சி தத்துவம் எங்கே போனது?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.





















