சரமாரி கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்! வாயடைத்து நின்ற கவர்னர் தரப்பு? குஷியில் தமிழக அரசு!
ஆர்.என்.ரவி ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்தே அவருக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி ஏன் மசோதாக்களை நிறுத்தி வைத்தார் என்று தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆர்.என்.ரவி ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்தே அவருக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆளுநர் ஆளும் அரசை சாடுவதும் முதலமைச்சர் ஸ்டாலினும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஆளுநரை சாடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
மசோதாக்கள் தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் அதை கிடப்பில் போடுவதாக குற்றச்சாட்டு எழுந்து கொண்டே இருந்தது.
இதுவரை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட 12 மசோதாக்களில் இரண்டு மசோதாக்கள் மட்டுமே ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார் எனவும் மீதம் 10 மசோதாக்கள் கிடப்பில் கிடப்பதாகவும் தமிழக அரசு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
இதை வைத்து குறிப்பிட்ட கால வரம்புக்குள் துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பார்திவாலா, மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநர் – தமிழக அரசு மோதலால் மாநிலமும் மக்களும்தான் பாதிக்கப்படுகிறார்கள் என கருத்து தெரிவித்திருந்தனர்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோத்தகி, தமிழக அரசு மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறது. ஆனால் ஆளுநர் அதை திருப்பி அனுப்புகிறார்.
உடனே சட்டமன்றத்தில் மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. அதை கண்டிப்பாக ஆளுநர் ஏற்க வேண்டும். இது விதிமுறை. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி அதை செய்வதில்லை.
இதுவரை ஆளுநருக்கு 12 மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் இரண்டு மசோதாக்களை மட்டுமே ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். மீதமுள்ளவை நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டன”என வாதங்களை முன் வைத்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய ஆளுநர் தரப்பு, “ஆளுநர் ஒரு மசோதாவை திருப்பி அனுப்பினால், தமிழக அரசு அதை மீண்டும் நிறைவேற்றினால் அது சட்டமாகிவிடும். துணை வேந்தர் என்பது முக்கிய பொறுப்பு. அதை அரசு மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என கருதுகிறீர்களா? என கேள்வி எழுப்பியது.
இதில் குறுக்கிட்ட நீதிபதிகள் அரசு செய்ய முன்வருவது ஆளுநருக்கு பிடிக்கவில்லை என்றால் அது தனிப்பட்ட கருத்துதானே என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த ஆளுநர் தரப்பு, தமிழக அரசு செய்ய விரும்புவதை மறைமுகமாக நீதிமன்றத்தின் மூலம் கோருகிறார்கள் என தெரிவித்தது.
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், “நாங்கள் கேட்பது, அனைத்து மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் வாய்ப்பு இருந்தது. அப்போது ஏன் அவர் 2 மசோதாக்களை மட்டும் அனுப்பினார்? அதை கூறுங்கள். எந்த பிரிவின் படி ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் இருந்தார்.
அரசியல் சாசனம் 200 இல்லாமல் வேறு விதிமுறை உள்ளதா? எந்த ஆதாரங்களும் ஆவணங்களும் இல்லாமல் மசோதாவை நிறுத்தி வைத்ததற்கு ஆதரவாக வாதாடுவதை ஏற்க முடியாது. மசோதாக்களை ஏன் நிறுத்தி வைத்தார் என்பதை தெரிவிக்க வேண்டும். என்ன காரணம் என்று சொல்லுங்கள். வழக்கு நாளை காலை விசாரிக்கப்படும்:” எனத் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

