Tomato Flu : தக்காளி காய்ச்சல் பரவல்: எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்! தமிழ்நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?
உடலில் தோன்றும் கொப்புளங்கள் எல்லாம் பார்ப்பதற்கு தக்காளி போலவே இருப்பதால் இதற்கு இந்த பெயர் வந்தது. இந்த கொப்பளங்கள் வடிவத்திலும் நிறத்திலும் தக்காளியை போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
கேரளாவின் கொல்லத்தில் ஒரு குழந்தைக்கு தக்காளி காய்ச்சல் வந்த நிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள தக்காளி காய்ச்சல் குறித்து சர்வதேச மருத்துவ நாளிதழான லேன்செட் அறிக்கை ஒன்றை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்ந்து வரும் நோய் பாதிப்புகள்
உலகெங்கும் ஏற்கனவே கொரோனா, குரங்கம்மை போன்ற தொற்றுகள் பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், புதிதாக குழந்தைகளிடையே பரவும் தக்காளி காய்ச்சல் என்னும் நோய் பாதிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த தக்காளி காய்ச்சல் குறித்து சர்வதேச மருத்துவ நாளிதழான தி லேன்செட் அறிக்கை ஒன்றை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தக்காளி காய்ச்சல் என்றால் என்ன?
தக்காளி காய்ச்சல் என்பது கை, பாதம் மற்றும் வாய் நோய் (HFMD) என்று மருத்துவ ரீதியாக அழைக்கப்படுகிறது. இது ஒரு அரிய வைரஸ் பரவல் நோயாகும், இந்த நோய் உடல் முழுவதும் சொறி மற்றும் கொப்புளங்களை உண்டாக்க கூடியது. உடலில் தோன்றும் கொப்புளங்கள் எல்லாம் பார்ப்பதற்கு தக்காளி போலவே இருப்பதால் இதற்கு இந்த பெயர் வந்தது. இதனால் ஏற்படும் கொப்பளங்கள் வடிவத்திலும் நிறத்திலும் தக்காளியை போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
லான்செட் அறிக்கை
இந்தியாவில் தக்காளி காய்ச்சல் பரவல் குறித்து லான்செட் நிறுவன அறிக்கையில் கூறியதாவது, "இந்த காய்ச்சல் முதல் முதலாக கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் பதிவாகி உள்ளது. இதுவரை இந்த நோயால் 82 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கேரளா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில்மட்டும் இந்த காய்ச்சல் பரவியுள்ள நிலையில், அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா ஆகியவையும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்", என்று கூறப்பட்டுள்ளது.
மா.சு. கருத்து
இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த போது இதுகுறித்து பேசிய அவர், "தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுகுறித்து யாரும் பயப்பட வேண்டாம். தமிழகத்தில் 27 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கிறது. தமிழகத்தில் 18 வயதை கடந்தவர்களில் 96.99% பேர் முதல் தவனை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்", என்று அவர் கூறினார்.