Weekend Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூர் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு பேருந்து- போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு
Weekend Holiday Special Bus : வார இறுதி நாள் விடுமுறையையொட்டி வெளியூர் செல்ல 17 ஆயிரம் பேர் அரசு விரைவுப்பேருந்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளதாகவும், எனவே வெளியூர் செல்ல திட்டமிடுபவர்களுக்காக கூடுதல் சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை- சிறப்பு பேருந்து
விடுமுறை என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். அந்த வகையில் வெளியூர் செல்ல திட்டமிடுபவர்களுக்கு வார இறுதி நாள் விடுமுறையால் குஷியில் உள்ளனர். எனவே உறவினவர்கள் வீட்டிற்கும், வெளியூர்களுக்கும் சுற்றுலா செல்ல தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், சிறப்பு ரயில் இயக்கப்படுமா.? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 19 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து
அந்த வகையில், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை. திருச்சி. கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி. தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 19/06/2026 (வெள்ளிக்கிழமை) அன்று 350 பேருந்துகளும், 20/06/2026 (சனிக்கிழமை) 365 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல மாதாவரத்திலிருந்து 19/06/2026 மற்றும் 20/06/2026 ஆகிய நாட்களில் 20 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
17 ஆயிரம் பயணிகள் முன்பதிவு
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை. நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 19/06/2026 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 20/06/2026 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் வசதிக்காக இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6,425 பயணிகளும் சனிக்கிழமை அன்று 3,287 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 7,213 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்து பயணியுங்க..
மேலும் விடுமுறை காரணமாக இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Official Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















