SP Velumani DVAC Raid: 810 கோடிப்பே... எஸ்.பி வேலுமணி மீதான புகார்கள்.. வெளியான முழு விவரம்..!
டெண்டருக்கு பதிவு செய்யப்பட்ட இரண்டு காண்ட்ராக்டர்களுமே ஒரே எண்ணிலிருந்து பதிவு செய்துள்ளனர். ஆக, இரண்டு நிறுவனங்களுமே ஒன்றுதான் என இதன்வழியாக தெரியவருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 17 பேர் மீது லஞ்சஒழிப்புத்துறை புகார் பதிவு செய்து அவருக்குச் சொந்தமான 52 இடங்களில் தற்போது ரெய்டு நடத்தி வருகிறது. தன்னை சார்ந்தவர்களுக்கு சென்னை பெருநகர மாநகராட்சியில் சுமார் ரூ. 463 கோடி அளவிலான டெண்டர்கள் ஒதுக்கீடு மற்றும் கோவை மாநகராட்சியில் ரூ. 342 கோடி அளவில் டெண்டர் ஒதுக்கீடு செய்து அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக முதல் தகவல் அறிக்கை குறிப்பிடுகிறது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனது சகோதரர் உட்பட தன்னை சார்ந்து இயங்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு டெண்டர் விடுத்ததில் முறைகேடு செய்ததாக 2018ல் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க.,வின் ஆர்.எஸ்.பாரதி தரப்பு புகார் அளித்தது. ஆனால் 2018-ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்ட புகாரில் 2021-இல் நடவடிக்கை எடுக்கக் காரணம் என்ன? தி.மு.க., - அ.தி.மு.க., அரசியல் கேம் என மேம்போக்காகச் சொல்லப்பட்டாலும் முதல் தகவல் அறிக்கை பல விவரங்களை முன்வைக்கிறது.
2014-2018ல் வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில்தான் விடுக்கப்பட்ட டெண்டர்களில் தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை
சட்டம் 1998, தமிழ்நாடு வெளிப்படைத்தன்மை சட்டம் 2012ல் டெண்டர் விதி 31, மத்திய கண்காணிப்பு ஆணைய வழிகாட்டுதல்கள் மற்றும் தமிழ்நாட்டின் பொறியியல் கையேடு வழிகாட்டுதல்கள் முதலியன கண்மூடித்தனமாக மீறப்பட்டிருப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கில் ஏ-1 குற்றம்சாட்டப்பட்டவராகப் பதிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வேலுமணியின் செல்வாக்கினால்தான் பெயர் தெரியாத சில அரசு அதிகாரிகள் இந்தச் சட்டத்தை மீறியிருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.
அரசு டெண்டர்கள் பொதுவாக செய்தித்தாள்கள் வழியாக விடுக்கப்படும்.குறிப்பிட்ட தேதி வரை டெண்டர்கள் விடுக்கப்படும். பிறகு டெண்டர் மூடப்பட்டு அதில் குறைந்த செலவில் தகுதியான டெண்டருக்கு யார் ஏலம் கேட்டுள்ளார்களோ அவர்கள் பொதுவாக தொடர்புடைய அரசுத்துறையால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆனால் டெண்டர் ஏலம்(Tender bidding), டெண்டர் ஏலத்துக்கான பேச்சுவார்த்தை உடன்படிக்கை(Tender negotiation) மற்றும் டெண்டர் செயலாக்கம் (Execution) உள்ளிட்ட மூன்று தளங்களிலும் முன்னாள் அமைச்சர் தரப்பு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது.
முறைகேடு விவரம்:
2014-2017 வரையிலான காலக்கட்டத்தில் வேலுமணியின் தம்பி அன்பரசனின் செந்தில் அண்ட் கோ நிறுவனம் மற்றும் ராஜன் ரத்தினசாமி நிறுவனமும் கோவை மாநகராட்சியில் மொத்தம் 47 டெண்டர்களுக்காக போட்டியிட்டுள்ளன. இதில் பதிவு செய்யப்பட்ட இரண்டு காண்ட்ராக்டர்களுமே ஒரே எண்ணிலிருந்து பதிவு செய்துள்ளனர். ஆக, இரண்டு நிறுவனங்களுமே ஒன்றுதான் என இதன்வழியாகத் தெரியவருகிறது. மேலும், சட்டத்தின்படி ஒரு நிறுவனமும் அதன் இயக்குநரும் தனித்தனியாக டெண்டருக்கு பதிவு செய்வது தடை செய்யப்பட்டது ஆனால் கே.சி.பி எஞ்சினியர்ச் பி.லிமிட்டெட் நிறுவனமும் அதன் இயக்குநர் சந்திரபிரகாஷும் 2014 -2017 காலக்கட்டத்தில் 5 டெண்டர்களை இவ்வாறு சட்டத்தை மீறி பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு டெண்டர் இவரது நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது.
2015 கோவையின் கே.சி.பி பில்டர்ஸ் நிறுவனமும் எஸ்.பி.பில்டர்ஸ் நிறுவனமும் 131 டெண்டர்களுக்கு மோதியுள்ளன. இவற்றில் 130 டெண்டர்கள் கே.சி.பி. பில்டர்ஸ் நிறுவனத்துக்குக் கிடைத்தது. இவற்றில் இரண்டு நிறுவனங்களுமே ஒரே காண்ட்ராக்டரின் கீழ் பதிவாகியுள்ளது.இவ்வாறு பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. இவர்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சந்திரகுமார்தான் டெண்டர் யாருக்குத் தருவது என்பதை முடிவு செய்பவர் என்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக வேலுமணி இருந்த காலக்கட்டத்தில் அவரது அலுவலகத்தில் இருந்தபடிதான் சந்திரகுமார் அதனை முடிவு செய்வார் என்றும் அது முழுக்க முழுக்க வேலுமணியின் பார்வையில்தான் நடக்கும் என்றும் முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.
2018-ஆம் ஆண்டில் டிவிஷனல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் எவ்வித பின் தங்கலுமின்றி இந்த வழக்கில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையேதான் 2020ல் அரசு தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் டெண்டர் குளறுபடிகளால் ஏற்பட்ட இழப்பீடாக அறிக்கை 4 மற்றும் 8ல் சில விவரங்களை அரசு தணிக்கையாளர் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில்தான் தற்போது வேலுமணியின் இடங்களில் ரெய்டு நடைபெற்றுவருகிறது.