Train Cancel: பொங்கல் சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து - எந்தெந்த ட்ரெயின்? என்ன காரணம்?
பொங்கல் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்டு சிறப்பு ரயில்கள் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று பொங்கல் பண்டிகை. பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் மிகவும் ஆனந்தம் பொங்கும். பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் குடும்பத்தினருடன் கொண்டாடுவது அனைவரது விருப்பமாக இருக்கும்.
சிறப்பு ரயில்கள் ரத்து:
இதனால், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோவை போன்ற பெருநகரங்களில் இருந்து இளைஞர்கள், மாணவ - மாணவிகள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பது வழக்கம். அவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்படுவது வழக்கம்.
மக்களின் வசதிக்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
1. தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்:
தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வரும் 19ம் தேதி மதியம் 3.30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த சிறப்பு ரயில் ( 06011) ரத்து செய்யப்படுகிறது.
2.தாம்பரம் - நாகர்கோயில் சிறப்பு ரயில்:
தாம்பரத்தில் இருந்து நாகர்கோயிலுக்கு வரும் 21ம் தேதி மதியம் 12.30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த சிறப்பு ரயில் ( எண் 06053) ரத்து செய்யப்படுகிறது.
3. சென்னை சென்ட்ரல் - கோவை சிறப்பு ரயில்:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வரும் 19ம் தேதி இரவு 11.25 மணிக்கு கோயம்புத்தூர் நோக்கி புறப்பட இருந்த சிறப்பு ரயில் ( 06033) ரத்து செய்யப்படுகிறது.
4. போத்தனூர் - சென்னை சென்ட்ரல்:
கோவை மாவட்டம் போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வரும் 21ம் தேதி இரவு 12.35 மணிக்கு புறப்பட இருந்த சிறப்பு ரயில் ( 06024) ரத்து செய்யப்படுகிறது.
5. சென்னை சென்ட்ரல் - போத்தனூர்:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வரும் 21ம் தேதி மதியம் 1.50 மணிக்கு போத்தனூர் நோக்கி புறப்பட இருந்த சிறப்பு ரயில் ( 06023) ரத்து செய்யப்படுகிறது.
போதிய பயணிகளின் முன்பதிவு இல்லாத காரணத்தால் இந்த ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட 5 ரயில்களில் 2 ரயில்கள் திங்கள் கிழமையும், 3 ரயில்கள் புதன்கிழமையும் இயக்கப்படுவதாக இருந்தது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதுவரை சென்னையில் இருந்து மட்டும் சுமார் 7 லட்சம் பேர் வரை வெளியூர்களுக்கு சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.





















