வேலூர்: போதிய படுக்கை வசதிகளின்றி, ஆம்புலன்சிலேயே காத்திருக்கும் கொரோனா நோயாளிகள்..
போதிய படுக்கை வசதி இல்லாததால் ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. படுக்கை கிடைக்காததால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர் .
அரசு மருத்துவ மருத்துவமனையில் அனைத்து ஆக்ஸிஜன்(O2)படுக்கைகள் நிரம்பியுள்ளதால் நோயாளிகள் காக்க வைக்கப்படுகின்றனர். கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார் செய்து வருகிறோம் என மருத்துவமனை தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இன்று காலை சுமார் 5-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் நோயாளிகளுடன் 1/2 மணி நேரம் முதல் 1 1/2 மணி நேரம் வரை காத்திருந்தனர். இவர்கள் அனைவரும் இதய நோய், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக வந்திருந்தவர்கள் ஆவர். நீண்ட நேரம் காத்திருந்தும் படுக்கை கிடைக்காததால் வேறு வழியின்றி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இது குறித்து நோயாளியின் உறவினர் ஒருவர் கூறுகையில் நாங்கள் மூச்சுத்திணறல் தொந்தரவு காரணமாக கடந்த 1 மணி நேரத்திற்கு மேலாக காத்துக் கொண்டிருக்கிறோம் போதிய ஆக்சிஜன் படுக்கை வசதி இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் படுக்கை கிடைக்க தாமதம் ஆகும் என்றும் மற்ற நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்த பிறகு தான் படுக்கை கிடைக்கும் என கூறுகின்றனர். எனவே தற்போது நாங்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம் என்றும் கூறினர்.
இது குறித்து மருத்துவமனை தரப்பில் கேட்ட போது (ARMO) மருத்துவமனையில் மொத்தம் 900 படுக்கைகள் உள்ளன அதில் 550 படுக்கைகள் ஆக்சிஜன் இணைப்பு கொண்ட படுக்கைகள் ஆகும். இது அனைத்திலும் தற்போது நோயாளிகள் உள்ளனர். கொரோனா தாக்கத்திற்கு பிறகு , கொரோனா நோயாளிகள் மட்டும் இன்றி மூச்சுத்திணறல் காரணமாக அதிக நோயாளிகள் வருகின்றனர் ஆகவே அனைவருக்கும் ஆக்சிஜன் இணைப்பு தேவைப்படுகிறது. இதனால் தான் நோயாளிகளை சிறிது நேரம் காக்க வைப்பதற்கான சூழல் உருவாகி வருகிறது. இதணை தடுக்க தற்போது மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் இணைப்பு கொண்ட தற்காலிக படுக்கைகளை அமைத்து வருகிறோம். மேலும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மற்ற கட்டிடங்களிலும் ஆக்சிஜன் படுக்கைகளை உருவாக்கி வருகிறோம் இவைகள் உருவாக்கப்பட்டப்பின் இது போன்ற நோயாளிகள் காத்திருப்பு நிலை தடுக்கப்படும் என்று தெரிவித்தார் .