மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பு மருந்துக்கு கடும் தட்டுப்பாடு
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் ஆர்வம் காட்ட துவங்கினர்.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது தவணை ஊசி செலுத்த வேண்டியவர்கள் தடுப்பு மருந்து கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சினுக்கு கடந்த இரண்டு வார காலமாக தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் ஏற்கெனவே கோவாக்சின் தடுப்பு மருந்தினை செலுத்தி கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் போடப்பட வேண்டிய நாட்கள் கடந்தும் கோவாக்சின் ஊசி செலுத்த வழியின்றி தவித்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தினசரி 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. கடந்த மாதங்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் போதிய ஆர்வம் காட்டாத நிலையே இருந்தது. தடுப்பூசி செலுத்தும் பகுதி கூட்டமின்றியே காணப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் ஆர்வம் காட்ட துவங்கினர்.
காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள துவங்கினர். ஆனால் அதே வேளையில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வழக்கம் போல் கிடைக்க வேண்டிய 300 தடுப்பு மருந்துகள் 200 ஆக குறைக்கப்பட்டு விட்டது. அதிலும் கோவாக்சின் தடுப்பு மருந்து வராமல் கோவிஷீல்ட் தடுப்பு மருந்து மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் கடந்த மாத துவக்கம் முதல் கோவாக்சின் ஊசி செலுத்தி கொண்டவர்கள் இரண்டாவது தவணை ஊசியை அரசு அறிவித்துள்ள நாட்களில் (கோவாக்சின் நான்கு வார இடைவெளியிலும் கோவிஷீல்ட் ஆறு வார இடைவெளியிலும்) செலுத்த இயலாமல் தவிக்கின்றனர்.
முதலில் எந்த தடுப்பு மருந்து போடபட்டதோ அதே மருந்தை மட்டுமே இரண்டாவது தவணையாக செலுத்தி கொள்ள வேண்டும். மாற்றி ஊசி போடப்பட கூடாது என சுகாதாரத்துறை எச்சரித்துள்ள நிலையில் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகள் என எங்குமே கோவாக்சின் தடுப்பு மருந்து சப்ளை செய்யப்படாததால், இதனை ஏற்கெனவே செலுத்தி கொண்டவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனால் அரசு மருத்துவமனையில் தினசரி மருத்துவ ஊழியர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. கடந்த 22ஆம் தேதி இரு தடுப்பு மருந்துகளும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படாததால் ஊசி செலுத்தி கொள்ள வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திருப்பி சென்றனர். இன்று வழக்கம் போல் 200 கோவிஷீல்ட் தடுப்பு மருந்து வந்ததால் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதலில் கோவாக்சின் செலுத்தியவர்கள் பட்டியல் விபரங்களின் அடிப்படையிலாவது உடனடியாக தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மூலம் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.