புதுச்சேரி அரசு துறைகளில் ரூ.28 கோடி முறைகேடு; தணிக்கை அறிக்கையில் காத்திருந்த அதிர்ச்சி
புதுச்சேரி அரசு துறைகளில் ரூ.28 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
புதுச்சேரி அரசு துறைகளில் ரூ.28 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி சட்டபேரவையில் 2021-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதியுடன் நிறைவடைந்த நிதி ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
தணிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வருவாய் வரவினங்கள் முந்தைய ஆண்டைவிட ரூ.891 கோடி குறைந்திருந்தது. 2019- 2020ல் ரூ.7 ஆயிரத்து 163 கோடியாக இருந்த மொத்த செலவினம் 2020-2021ல் ரூ.7 ஆயிரத்து 505 கோடியாக அதிகரித்தது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட ரூ.424 கோடி அதிகம் ஆகும். மொத்த வரவு செலவு திட்ட ஒதுக்கீடான ரூ.9 ஆயிரத்து 256 கோடியில் ரூ.8 ஆயிரத்து 361 கோடி செலவிடப்பட்டு ரூ.894 கோடி சேமிப்பு ஏற்பட்டது. 10 தலைப்புகளில் எந்த ஒரு செலவினமும் மேற்கொள்ளப்படவில்லை. 788 நேர்வுகளில் ரூ.462 கோடிக்கான பயன்பாட்டு சான்றிதழ்கள் நிலுவையிலிருந்தன.
இவற்றில் ரூ.39.88 கோடிக்கான 226 பயன்பாட்டு சான்றிதழ்கள் 9 ஆண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. 70 அமைப்புகளில் 2020-2021 வரை பெறப்பட வேண்டிய ஆண்டு கணக்குகள் தணிக்கையால் பெறப்படவில்லை. 2021 மார்ச் வரையில் பல்வேறு அரசுத்துறைகளில் 321 நேர்வுகளில் ரூ.28 கோடியே 5 லட்சம் அரசுப்பணம் முறைகேடு, இழப்பு, களவு மற்றும் பணக்கையாடல்கள் செய்யப்பட்டுள்ளதாக யூனியன் பிரதேச அரசு தெரிவித்தது. 13 அரசு நிறுவனங்களில் மொத்த முதலீடு ரூ.738 கோடியாகும். 6 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.35.07 கோடி லாபத்தையும், 6 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.62.43 கோடி நஷ்டத்தையும் அடைந்து ரூ.27.36 கோடி நஷ்டத்தை சந்தித்தன. 12 அரசு நிறுவனங்களின் கணக்குகளும் இறுதி செய்யப்படாமல் நிலுவையில் இருந்தன. 2 நிறுவனங்கள் நிலுவையிலிருந்த 2 கணக்குகளை 2020-21 காலகட்டத்தில் தணிக்கைக்கு சமர்ப்பித்தன. என்று தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதியுடன்
நிறைவடைந்த நிதியாண்டிற்கான தணிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2017-20 காலகட்டத்தில் மின் அனுப்புகை மற்றும் பகிர்மான இழப்பின் மதிப்பு ரூ.69.51 கோடியாக கணக்கிடப்பட்டது. குறைபாடுள்ள அளவிகளை மாற்றவதில் தாமதங்கள் ஏற்பட்டது. பழுதடைந்த அளவிகள் 15 வேலை நாட்களுக்குள் மாற்றித்தரப்பட வேண்டியபோதிலும் 25 ஆண்டுகளாக குறைபாடுள்ள அளவிகள் மாற்றப்படவில்லை. ரூ.709 கோடி வருவாய் வசூலிக்கப்படவில்லை. சிறைச்சாலையில் பெரும்பாலான கைதிகள் எந்தவொரு பணியிலும் ஈடுபடுத்தப்படவில்லை. மேலும் அவர்கள் செய்த பணிக்கான ஊதியமும் வழங்கப்படவில்லை.
மாதிரி சிறை நடைமுறை விதிகளுக்கு எதிராக தகுதிவாய்ந்த ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பதற்கு ஆய்வு மேற்கொள்ள மாநில அளவிலான குழு அமைக்கப்படவில்லை. குடியிருப்புகள் கட்டுவதற்கு முன்பாகவே பயனாளிகளை தேர்வு செய்யாதது மற்றும் அதன் தொடர்ச்சியாக குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படாதது ஆகியவை ரூ.1.54 கோடி பயனற்ற முதலீட்டிற்கு வழிவகுத்தது. மீன்களை பதப்படுத்த 2015-ல் ரூ.3.09 கோடி செலவில் உருவாக்கப்பட்ட பனிக்கட்டி ஆலை மற்றும் குளிர்பதன சேமிப்பு நிலையம் ஆகியவை 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் வணிக ரீதியிலான செயல்பாட்டை தொடங்கவில்லை என தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்