EPS: பிஞ்சுக் குழந்தைக்கு பாலியல் கொடூரம்; 13 மணிநேர தாமதம் ஏன்?- சொந்தக் கட்சி என்பதாலா?- ஈபிஎஸ் கேள்வி
பிஞ்சுக் குழந்தைக்கு தொடர்ந்து பாலியல் கொடூரம் நடந்தும் சொந்தக் கட்சி என்பதால், 13 மணிநேரம் வழக்குப் பதிவு செய்யவில்லையா என்று ஈபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிஞ்சுக் குழந்தைக்கு தொடர்ந்து பாலியல் கொடூரம் நடந்தும் சொந்தக் கட்சி என்பதால், 13 மணிநேரம் வழக்குப் பதிவு செய்யவில்லையா என்று ஈபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையில் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலையில் கொடுக்க மறுப்பதைக் கண்டித்து, அதிமுக எம்எல்ஏக்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ’’நேற்றிரவே குழந்தையின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த கொடூரமான சம்பவத்தில் கிட்டத்தட்ட 13 மணி நேரம், அதாவது காலை 9 மணி வரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. பிஞ்சுக் குழந்தை பலமுறை பள்ளி தாளாளர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருக்கிறது. ஆனால் சொந்தக் கட்சி என்பதால் உடனே நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கொடூரக் குற்றம் நடந்தது உளவுத் துறைக்குத் தெரியவில்லையா? அது உண்மையெனில், இந்த அரசு திறமையற்ற அரசாங்கம் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. கடலூர் மாவட்டம் முழுக்கப் போராட்டம், கொந்தளிப்பு சூழல் ஏற்பட்ட நிலையில், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல நாங்கள் தீர்மானம் கொண்டு வரப்போகிறோம் என்று தெரிந்துதான் கைது செய்துள்ளனர். சட்டப் பேரவை நடுநிலையாகச் செயல்படவில்லை’’ என்று ஈபிஎஸ் தெரிவித்தார்.
என்ன நடந்தது?
விருத்தாசலத்தில் 6 வயதுச் சிறுமி தான் படிக்கும் பள்ளி தாளாளராலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மாநிலத்தை உலுக்கியுள்ள நிலையில், இது தொடர்பாக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அதற்கு பதில் அளித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், "சம்பவம் தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரில் காவல்துறை துரித நடவடிக்கை எடுத்துள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக பள்ளி தாளாளர் பக்கிரிசாமி உடனடியாக கைது செய்யப்பட்டார்.
குற்றத்தில் ஈடுபட்டது யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுத்திட நான் உத்தரவிட்டுள்ளேன். எனக்கு தெரியவில்லை; டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என நான் கூற மாட்டேன்.
மனித குலத்திற்கு அவமானச் சின்னம்
புகாருக்கு உள்ளானவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுவோரை மனித குலத்திற்கு ஒரு அவமானச் சின்னமாக கருதுகிறோம்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
எனினும் இதுகுறித்து சட்டப் பேரவையில் பேச தான் எழுந்தவுடன் நேரலை தடை செய்யப்பட்டதாக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். இதைக் கண்டித்து, அதிமுக எம்எல்ஏக்கள் இன்று பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியது குறிப்பிடத்தக்கது.