Senthil Balaji ED Custody: ஜாமீன் கிடையாது; அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 8 நாள் அமலாக்கத்துறை காவல் - நீதிமன்றம் உத்தரவு
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் இருக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் இருக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி அமலாக்கத்துறையினர் 17 மணி நேரமாக சோதனை நடத்தினர். அவரது தலைமைச் செயலக அறையிலும் சோதனையானது நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பிக்கள், கூட்டணி கட்சியினர் என அனைவரும் நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தனர். தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இதற்கிடையில் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையில் செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற காவலை நிராகரிக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் அவரை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையை அமலாக்கத்துறை ஏற்பாடு செய்யும் மருத்துவக் குழுவும் ஆராயலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார். அவருக்கு இன்னும் 2,3 நாட்களில் அறுவைச்சிகிச்சை செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு, அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் அளிக்கப்பட்ட மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் 8 நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் 23 ஆம் தேதி மீண்டும் செந்தில்பாலாஜியை மாலை 3 மணியளவில் காணொலி வாயிலாக ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மருத்துவமனையிலேயே செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.