Pannur Airport : பன்னூரில் அமைகிறதா, சென்னை 2-வது விமான நிலையம்? டெல்லி விரையும் அமைச்சர் தங்கம் தென்னரசு..
மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுடன் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழுவினர் பங்கேற்கும் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது
![Pannur Airport : பன்னூரில் அமைகிறதா, சென்னை 2-வது விமான நிலையம்? டெல்லி விரையும் அமைச்சர் தங்கம் தென்னரசு.. second Airport in Chennai is likely to be located at Pannur near Chennai Pannur Airport : பன்னூரில் அமைகிறதா, சென்னை 2-வது விமான நிலையம்? டெல்லி விரையும் அமைச்சர் தங்கம் தென்னரசு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/17/0b9f4f915ce08f53810ef7f55b24d366_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னையில் இரண்டாவது விமான நிலையத்தை பன்னூரில் அமைக்க சாதகமான சூழல் இருப்பதாக அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள், 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் விமான பயணிகள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான முடிவை மத்திய விமான போக்குவரத்து ஆணையம் எடுத்தது.
4 இடங்களில் தேர்வு 2 இடங்கள் இறுதி
இதற்காக சுங்குவார்சத்திரம் அருகே திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பன்னூர், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர், திருப்போரூர், பட்டாளம் ஆகிய 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பன்னூர், பரந்தூர் ஆகிய 2 இடங்கள் இறுதி செய்யப்பட்டன. அவற்றில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய விமான போக்குவரத்து ஆணையம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் ஆகியவை ஆய்வு மேற்கொண்டு முதற்கட்ட சாத்தியக்கூறு அறிக்கையை தயாரித்துள்ளன.
இதன்படி பன்னூர், பரந்தூர் ஆகிய 2 இடங்களிலும் உள்ள மொத்த நிலப்பரப்பு, சாலை ரெயில் போக்குவரத்தை சுலபமாக இணைக்கும் வசதி, மின்சார வசதி, சென்னை நகரில் இருந்து இந்த இடங்களை அடைவதற்கான தூரம் போன்ற பல்வேறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு முதற்கட்ட சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
- அதில் பரந்தூர், பன்னூர் ஆகிய 2 இடங்களும் விமான நிலையம் அமைப்பதற்கான சூழலை கொண்டுள்ள போதிலும் பரந்தூரை பன்னூரில் கூடுதல் அம்சங்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அதேவேளையில் சவால்கள் இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
- பன்னூரில் 4ஆயிரத்து 500 ஏக்கர் நிலமும் பரந்தூரில் 4,791 ஏக்கர் நிலமும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த 2 இடங்களும் ஓடுதளங்கள் அமைக்கும் வகையிலும், விமானங்களை நிறுத்த போதுமான இடவசதியுடனும் உள்ளது.
- இந்த இரண்டு இடங்களையும் சென்னை செண்டிரல், எழும்பூர் ஆகிய பகுதிகளில் இருந்தும், அம்பத்தூர், சோழிங்கநல்லூர், சென்னை விமான நிலையம், தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்தும் வாகனங்கள் மூலம் சென்றடைவதற்கு ஆகும் நேரம் மற்றும் தூரம் ஆகியவை கணக்கிடப்பட்டது.
- இதில் பரந்தூரை விட பன்னூருக்கு மேற்காணும் இடங்களில் இருந்து குறைவான பயண நேரத்தில் பயணிக்க முடியும்.
- மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள தடை இரு இடங்களிலும் உள்ளது. இரு இடங்களின் அருகிலும், சுற்றுப்பகுதிகளிலும் உயர்மின்னழுத்த கோபுரங்கள், செல்போன் கோபுரங்கள், மின் கம்பங்கள் போன்றவை உள்ளன. இத்தைய தடைகள் செயல்பாட்டுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா என இதுவரை அறியப்படவில்லை. இது குறித்து விரிவான ஆய்வு தேவை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி விரையும் தங்கம் தென்னரசு
இந்த முதற்கட்ட சாத்தியக்கூறு அறிக்கை சென்னையின் 2ஆவது விமான நிலையம் பன்னூரில் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதையே காட்டுகிறது. இந்த நிலையில் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுடன் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழுவினர் பங்கேற்கும் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைய உள்ள இடம் உள்ளிட்ட முக்கியமான பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)