கரூர் : பள்ளி மாணவர்களை மனு கொடுக்க அழைத்துவந்த கல்லூரி மாணவி.. ஆட்சியர் அட்வைஸ்..
தற்போதுள்ள கொரோனா தொற்று பரவும் காலகட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் சீருடையுடன் தாங்கள் அழைத்து வந்துள்ள நிலையில் தங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியது இருக்கும்.
கரூரில் தங்களுடைய கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க சீருடையில் வந்த அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் - பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் மனு கொடுக்க அழைத்து வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி மாணவியிடம் ஆட்சியர் எச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் வாரம்தோறும் நடப்பது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக நடைபெறவில்லை. அதற்கு பதிலாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் அதில் தங்களுடைய மனுக்களை போட்டு விட்டு நடைமுறை இருந்து வந்த நிலையில், இன்று முதல் நேரடியாக மனுக்கள் வாங்கப்படும் என ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து இன்று மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் புகார் மனுக்களை அளித்துச் சென்றனர்.
அப்போது, கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த மருதூர் பஞ்சாயத்து விஸ்வநாதபுரம் கிராமம் உள்ளது. சுமார் 200 ஆண்டு காலமாக அங்கு வசிக்கும் அந்த கிராம மக்களுக்கு சாலை வசதி, தெரு விளக்குகள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் பல முறை, பல ஆண்டுகளாக மனு அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களை அழைத்துக் கொண்டு அப்பகுதி இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வருகை தந்தனர்.
அப்போது, அவர்களை டிஜிட்டல் பேனர் எடுத்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து டிஜிட்டல் பேனர்களை சுருட்டி எடுத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியரை சந்திக்க சென்றனர். அங்கு பணியில் இருந்த அதிகாரிகளிடம் பள்ளிக் குழந்தைகள் ஆட்சியரை சந்திக்க அனுமதி கேட்டனர். பள்ளி குழந்தைகள் அனுமதிக்க வேண்டாம் என கூறியதை அடுத்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பின்பு, அவர்களுடன் வந்த கல்லூரி மாணவி மற்றும் ஒருவரும் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். அப்போது மனுவினை பெற்றுக் கொண்ட ஆட்சியர் பிரபு சங்கர், எந்தப் பிரச்சினைகளாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை பள்ளிக்குச் செல்ல விடாமல் இங்கு அழைத்து வரக்கூடாது என்றும், இது போன்று நடந்து கொண்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என (அட்வைஸ்) தெரிவித்தார். மேலும், கல்லூரி மாணவி உணர்ச்சிவசப்பட்டு பேசியதால் கூட்டரங்கை விட்டு வெளியேறும்படி கூறினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டரங்கை விட்டு வெளியேறிய மாணவி, செய்தியாளர்களிடம் பேசிய மாணவி, அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாகவும், பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை இருப்பதனால்தான் பள்ளிக் குழந்தைகள் தானாக இங்கு வந்தனர் என தெரிவித்தனர். மேலும், சாலை வசதி செய்து தரும்வரை பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் நாங்கள் செல்லப்போவதில்லை எனவும் தெரிவித்தனர்.