86 அடியை எட்டியது சாத்தனூர் அணை- வினாடிக்கு 660 கனஅடி நீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை அடுத்த சாத்தனுார் அணையின் நீர்மட்டம் 86அடியை எட்டியுள்ளது. வினாடிக்கு 660 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் உருவகும் தென்பெண்ணை அறு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக பாய்ந்து கடலூர் மாவட்டத்தில் வங்கக்கடலுடன் கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே 1956ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டது. தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பகலில் விட்டுவிட்டு லேசான மழையும், இரவில் பரவலான கனமழையும் பெய்கிறது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டு வருகிறது.
சாத்தனூர் அணையில் தேக்கப்படும் தண்ணீரின் மொத்த கொள்ளளவு 7 ஆயிரத்து 321 மில்லியன் கனஅடி. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 51 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனை தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் சாத்தனூர் அணைக்கு நேற்று இரவு நிலவரப்படி வினாடிக்கு 660 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஆகஸ்ட் 27 ஆம் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 81.75 அடியாக இருந்தது. ஆகஸ்ட் 28 ஆம் தேதி 82 அடியை எட்டியது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் செப்டம்பர் 4 ஆம் தேதி அணை நீர்மட்டம் 82.5 அடியானது. அதன் பின்னர் 83 அடியை தொட்டது. செப்டம்பர் 27 ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 84.4 அடியாக உயர்ந்தது. சில நாட்களாக தண்ணீர் வரத்து இல்லாததால் நீர்மட்டம் உயராமல் இருந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் நேற்று முதல் அணைக்கு நீர்வரத்து தொடங்கியது. நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 85.40 அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே தேதியில் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 77 அடியாக இருந்தது. நேற்று முன்தினம் நீர்மட்டம் 85. 40 அடி இருந்தது. நிலவரப்படி 86 அடியை எட்டியது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 9 அடி தண்ணீர் அணையில் உயர்ந்துள்ளது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் சுமார் 50,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதனால் பாசன வசதி பெறுகின்ற விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து அதேபோல், செங்கம் தாலுகா குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 60 அடியில் 50.48 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 80 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே போன்று கலசபாக்கம் தாலுகா மிருகண்டா அணையின் மொத்த நீர்மட்ட உயரமான 22.97 அடியில் 15.09 அடி நிரம்பியிருக்கிறது. அதேபோல், போளூர் தாலுகா செண்பகத்தோப்பு அணையின் மொத்த நீர்மட்ட உயரமான 62.32 அடியில் 53.14 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது.