பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு வரிசையில் பால்! - கோரிக்கை விடுக்கும் உற்பத்தியாளர் நலச்சங்கம்
பால் கொள்முதல் விலையில் பசும் பாலுக்கு ரூ. 10 உயர்த்தி 32 ரூபாயிலிருந்து 42 ரூபாயாகவும், எறுமை பாலுக்கு 15 ரூபாய் உயர்த்தி 41 ரூபாயிலிருந்து 56 ரூபாயாகவும் நிர்ணயம் செய்ய வேண்டும்
இடுபொருட்கள் விலை உயர்வு, கூலி அதிகரிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பால் கொள்முதல் விலையில் பசும் பாலுக்கு ரூ. 10 உயர்த்தி 32 ரூபாயிலிருந்து 42 ரூபாயாகவும், எறுமை பாலுக்கு 15 ரூபாய் உயர்த்தி 41 ரூபாயிலிருந்து 56 ரூபாயாகவும் நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், கரவை மாடுகள் அனைத்திற்கும் கலைஞர் காப்பீடு திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும், சமச்சீர் கால்நடை கலப்பு தீவனத்தை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும், சத்துணவு திட்டத்தில் பால் அல்லது சுவையூட்டப்பட்ட பால் பவுடர் வழங்கிட வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில், புன்னாக்கு, தாணியங்கள், பருத்தி ஆகிய இடுபொருட்கள் விலை உயர்வு, கூலி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றால் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை கருத்தில் கொண்டு பால் கொள் முதல் விலையை உயர்த்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரவித்தார். தனியார் பால் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து பாலை கொள்முதல் செய்து கொள்வதால் கூட்டுறவு சங்கங்கள் அழிவு நிலைக்கு செல்லும் அபாயம் இருப்பதாகவும், நுகர்வோருக்கு தரமான பால் கிடைக்க வேண்டும் என்றால் விற்பனை விலையும் உயர்த்திட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்த அவர், இதனை ஈடுசெய்வேண்டும் எனில் பால் உற்பத்தியாளர்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார். இதன்மூலம் தமிழகத்திலுள்ள ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்று கூறினார். மேலும் ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகையை ரூபாய் 10 ஆயிரம் ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சத்துணவில் பால் சேர்க்கப்படுவது மூலம் மாணவர்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, பால் உற்பத்தியாளர்களுக்கும் வருமானம் பெருகும் என்றார். தற்போது நிலவி வரும் விலைவாசி உயர்வினால் மாடுகளுக்கு தீவனம் வைத்து சரிவர பராமரிப்பதற்கு அரசு உதவினால் தான் தரமான பால் கிடைக்கும், எனவே அரசு உடனடியாக எங்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்றார். விரைவில் பால்வளத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து இதைப்பற்றி கூற உள்ளதாக தெரிவித்தார்.