Raj Bhavan Tea Party: குடியரசு தினம்: ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து - பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின்! மோதலுக்கு முற்றுப்புள்ளியா?
சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.
தமிழ்நாடு சட்ட பேரவையில், அரசு தயாரித்த அறிக்கையில் சில பகுதிகளை படிக்காமல் ஆளுநர் தவிர்த்து படித்தார். அப்போது, ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்தார். அப்போது, சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் வெளியேற்றம் செய்தார்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற சர்ச்சை சம்பவத்திற்குப் பிறகு 17 நாட்களுக்கு பின் ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இன்று நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர்.
உரசல்:
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதில் இருந்து திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான உரசல்கள் தொடங்கிவிட்டன. சமீபத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்று இந்த மாநிலத்தை அழைப்பதே மிகவும் பொருத்தமானது என்று பேசியிருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதனையடுத்து ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்த ஆண்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த பல்வேறு கருத்துக்களை வாசிக்காமல் தவிர்த்தது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனால், ஆளுநர் ஆர் என் ரவியின் உரைக்கு எதிராக அவர் முன்னிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். இதனால் அவையை விட்டு ஆளுநர் ரவி பாதியில் வெளியேறினார். மேலும் அவையில் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பு ஆளுநர் வெளியேறியது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசு தலைவருக்கு சென்ற பிரச்னை:
இதையடுத்து திமுக எம்.பிக்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆளுநர் குறித்து முறையிட்டனர். இதையடுத்து இது குறித்து விளக்கம் அளிக்க டெல்லி சென்றிருந்தார் ஆர்.என்.ரவி. ஆளுநர் மாளிகை தரப்பில் தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கான காரணம் குறித்து, விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் ”வரலாற்று பண்பாடு பற்றி பேசும்போது காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே உள்ள தொடர்பை குறிக்க, தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்று பண்பாட்டு சூழலில், தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்” என குறிப்பிடப்பட்டது.
அதேபோல 74ஆவது குடியரசு தின வரவேற்பு அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. அதேபோல தமிழ்நாட்டின் சின்னமும் திருவள்ளுவர் ஆண்டும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால் ஆளுநருக்கு டெல்லியில் இருந்து ஏதேனும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
நேருக்கு நேர் சந்திப்பு:
இதையடுத்து சட்டப்பேரவை சர்ச்சை சம்பவத்திற்கு பிறகு 17 நாட்கள் கழித்து ஆளுநரும் முதலமைச்சரும் குடியரசு தின விழாவில் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை சிரித்த முகத்துடன் கை குலுக்கி வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் வணக்கம் செலுத்தி, வரவேற்பை ஏற்றுக்கொண்டார் ஆளுநர் ரவி.
அதன்பிறகு தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய ஆளுநர், மேடைக்குச் சென்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், மேடையில் இருந்தபடி ஆளுநரும், முதலமைச்சரும் சிரித்துப் பேசி கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர்.
ஆளுநர் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்பு
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணித்திருந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துக்கொண்டார். தமிழ்நாடு அரசியலில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் வரும் காலங்களில் ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே சுமுக உறவை ஏற்படுத்துமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்