Republic Day 2022 Medals : குடியரசு தினத்திற்கான காவல்துறை பதக்கங்கள் : தமிழ்நாட்டில் யார்? யாருக்கு? முழு விவரம் உள்ளே
குடியரசு தினத்திற்கான ஜனாதிபதி காவல்துறை பதக்கம் தமிழ்நாட்டின் ஏ.டி.ஜி.பி.வெங்கட்ராமன் மற்றும் காவல் ஆய்வாளர் சிவனருள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின்போது காவல்துறையில் சிறந்து பணியாற்றும் காவல்துறையினருக்கு ஜனாதிபதி பதக்கம், வீரதீரச் செயலுக்கான பதக்கம், மெச்சத்தகுந்த சேவைக்கான பதக்கம் வழங்கப்படுவது வழக்கம். இந்த பதக்கங்களானது காவல்துறையின் மிகுந்த உயரிய கவுரவமாக கருதப்படுகிறது.
நாட்டின் 73வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள காவல்துறையினர் 939 நபர்களுக்கு இந்த பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 189 காவல்துறையினருக்கு வீரதீரச் செயலுக்கான பதக்கமும்,, 88 காவல்துறையினருக்கு ஜனாதிபதி பதக்கமும், 662 காவல்துறையினருக்கு காவல்துறையின் சிறந்த சேவைக்கான பதக்கமும் வழங்கப்பட உள்ளது. மிகுந்த உயரிய பதக்கமான ஜனாதிபதி பதக்கத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.டி.ஜி.பி. வெங்கட்ராமன், சி.ஐ.டி. சிறப்பு காவல் ஆய்வாளர் சிவனருள் ஆகியோரும் பெற உள்ளனர்.
காவல்துறையின் சிறந்த சேவைக்கான பதக்கத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 காவல்துறை அதிகாரிகள் பெற உள்ளனர். அவர்களில் மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் ஆகியோரும் பெற உள்ளனர். இவர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளான உதவி ஆணையர் பிரபாகரன், உதடி ஆணையர் முருகவேல், டி.எஸ்.பி. முரளிதரன், காவல் ஆய்வாளர் சண்முகம், கூடுதல் துணை ஆணையர் இளங்கோவன், காவல் ஆய்வாளர் முருகேசன், காவல் உதவி ஆய்வாளர் சிவகணேசன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கணேசன், சிறப்பு காவல் ஆய்வாளர் பசுபதி ஆகியோரும் பதக்கம் வென்றுள்ளனர். பதக்கம் வென்ற காவல்துறையினருக்கு உயரதிகாரிகளும், சக காவல்துறையினரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மட்டுமின்றி, காவல்துறைக்கான சிறந்த சேவைக்கான பதக்கத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஜி. பிரதீப்குமார், உதவி ஐ.ஜி. சரவணன், எஸ்.பி. கண்ணம்மாள், துணை ஆணையர் சுரேந்திரநாத், கார்த்திகேயன், காவல் ஆய்வாளர் அண்ணாதுரை, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தாமஸ் பிரபாகர் ஆகியோரும் பெற உள்ளனர்.
வீரதீரச் செயல்களுக்கான காவல்துறை பதக்கங்களை பெறும் 189 நபர்களில் 134 பேர் ஜம்மு – காஷ்மீர் மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். 47 பேர் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றுபவர்கள். ஒருவர் வடகிழக்கு மண்டலத்தைச் சேர்ந்தவர். இவர்களில் 115 பேர் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். 30 பேர் சி.ஆர்.பி.எப். போலீஸ் ஆவார்கள். 3 பேர் ஐ.டி.பி.பி.யையும், 2 பேர் பி.எஸ்.எப்.-யையும், 3 பேர் சசாஸ்த்ரா சீமா பாலைச் சேர்ந்தவர்கள், 10 பேர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 9 பேர் ஒடிசா காவல்துறையையும், 7 பேர் மகாராஷ்ட்ரா காவல்துறையையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள். மற்றவர்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்