Francis Kiruba: காலமானார் பிரபல எழுத்தாளர் ஃபிரான்சிஸ் கிருபா..!
Poet Francis Kiruba Passed Away: கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான ஃப்ரான்சிஸ் கிருபா உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இலக்கியத்தின் நவீன கவிதை எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவர் ஃப்ரான்சிஸ் கிருபா(Francis Kiruba). இலக்கிய வட்டாரத்தில் முக்கிய எழுத்தாளராக வலம் வந்த பிரான்சிஸ் கிருபா உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தமிழ் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பத்தினிப்பாறை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஃப்ரான்சிஸ் கிருபா. பள்ளிப்படிப்பு வரை மட்டுமே பயின்றுள்ளார். கவிஞரான ஃப்ரான்சிஸ் கிருபா பல்வேறு கவிதை தொகுப்புகளுடன் தமிழ் திரையுலகில் பாடலாசிரியராகவும் வலம் வந்தவர். சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிகுழு, அழகர்சாமியின் குதிரை, ராட்டினம், குரங்கு பொம்மை உள்பட 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். இதுமட்டுமின்றி, முன்னாள் முதல்வர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு படமான காமராஜ் படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தையும் பிரான்சிஸ் கிருபாதான் எழுதியுள்ளார்.
இவர் எழுதிய கன்னி எனும் நாவலுக்கு 2007-ஆம் ஆண்டு தமிழின் முன்னணி வார இதழ் ஒன்றில் சிறந்த புதினம் என்ற விருது கிடைத்தது. 2008-ஆம் ஆண்டு இவருக்கு நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தரராமசாமி விருது கிடைத்தது.
கவிதைக்கான விருது என்ற நூலுக்காக சுந்தரராமசாமி விருத பெற்ற இவர், சம்மனசுக்காடு என்ற நூலுக்காக சுஜாதா விருது, மீரா விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார். இவர் இதுவரை மல்லிகை கிழமைகள், சம்மனசுக்காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலின்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் ஆகிய கவிதை தொகுப்புகளை எழுதியுள்ளார்.
2019-ஆம் ஆண்டில் ஒரு முறை, ஃப்ரான்சிஸ் கிருபா ஒருமுறை கோயம்பேட்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு முதலுதவி செய்து காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், அந்த இளைஞர் உயிரிழந்ததாலும், பிரான்சிஸ் கிருபா நீண்ட முடியுடன் மாறுபட்ட தோற்றத்தில் இருந்ததாலும் போலீசார் அவர்தான் கொலையாளி என்று சந்தேகித்து அவரை கைது செய்தனர். பின்னர், பிரேத பரிசோதனையின் அடிப்படையில் உயிரிழந்த வடமாநில இளைஞர் வலிப்பு ஏற்பட்டும், அதனால் மாரடைப்பு ஏற்பட்டதாலே உயிரிழந்ததாகவுமே கண்டறியப்பட்டது. அதன்பின்னரே பிரான்சிஸ் கிருபா விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஃப்ரான்சிஸ் கிருபா உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது. ஃப்ரான்சிஸ் கிருபா தனது இறுதிநாட்களில் வறுமையால் மிகவும் வாடியதாகவும், அதனால் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியதாகவும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்
மேலும் படிக்க : 'சின்னத்திரைக்கு வரும் சின்னத்தாய் மகன்!’ - இளையராஜாவின் மியூசிகல் ரியாலிட்டி ஷோ விரைவில்!