வெள்ளத்தில் சிக்கியவர்களை கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு எவ்வாறு காப்பாற்றுவது..?
வெள்ளத்தில் சிக்கியவர்களை கையில் கிடைக்கும் பொருட்களான குடம், கயிறு, லாரி டயர் டியூப் ஆகியவற்றை கொண்டு எவ்வாறு காப்பாற்றுவது போன்ற வகைகளில் செயல்முறை விளக்க ஒத்திகை நடத்தி காண்பிக்கப்பட்டது.
கரூர் அமராவதி ஆற்றில் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் ஆணையம் சார்பில் வெள்ளத்தில் சிக்கியவர்களை கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்டம், திருமாநிலையூர் அமராவதி ஆற்று படித்துறையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில் வெள்ள பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு பணிகள் தொடர்பான ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் பார்வையிட்டார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், வெள்ள பேரிடர் காலங்களில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர்கள் பொதுமக்கள் அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தப்படும் எளிமையான பொருட்களை கொண்டு தங்களை காத்து கொள்வது தொடர்பான செயல்விளக்க ஒத்திகையும், மீட்கப்பட்டவர்களுக்கு பொது சுகாதாரத் துறையினர் முதலுதவி செய்து அவசர கால ஊர்தியில் ஏற்றி வைப்பது தொடர்பான மாதரி செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
தமிழ்நாடு தீயணைப்பு, மீட்புப்பணிகள் துறை புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் ஏற்படும்போதும், தீ விபத்து போன்ற பல்வேறு விபத்துகள் ஏற்படும் போதும் பொதுமக்களை பாதுகாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை ஆகியோர்கள் இணைந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை கையில் கிடைக்கும் பொருட்களான குடம், கயிறு, லாரி டயர் டியூப் ஆகியவற்றை கொண்டு எவ்வாறு காப்பாற்றுவது போன்ற வகைகளில் செயல்முறை விளக்க ஒத்திகை நடத்தி காண்பிக்கப்பட்டது.
மேலும், பேரிடர் என்பது எதிர்பாராத நேரங்களில் வருவது தான். எனவே அதில் இருந்து நாம் பாதுகாத்து கொள்ள முன்னெச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். எனவே வெள்ள பேரிடர் காலங்களில் இந்த மாதிரி ஒத்திகையை பார்வையிட்ட பொதுமக்கள் அதேபோல் தங்களையும் சுற்றுப்புறம் உள்ளவர்களையும் பாதுகாத்து கொள்ள வேண்டும். மேலும் இதைப்போல் மண்மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட திருமுக்கூடலூர் அகஸ்தீஸ்வரர் கோயில் அருகில் அச்சமாபுரம் கிராமத்திலும், புகளுர் வட்டத்திற்கு உட்பட்ட தவிட்டுபாளையம் நஞ்சை புகளுர் கிராமத்திலும், குளித்தலை வட்டத்திற்கு உட்பட்ட வைகை நல்லூர் வடக்கு கிராமத்திலும் மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டத்திற்கு உட்பட்ட திருக்காம்புலியூர் கிராமத்திலும் மாதிரி ஒத்திகை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், மாவட்ட தீயணைப்பு மீட்புத் துறை அலுவலர் ஜெகதீஷ், இணை இயக்குநர்(சுகாதாரம்) ஞானக்கண் பிரேம் நவாஸ், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) சந்தோஷ்குமார், கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) சைபுதீன், மாவட்ட வழங்கல் அலுவலர் தட்சிணாமூர்த்தி, திருமாநிலையூர் மாமன்ற உறுப்பினர் வசுமதிபிரபு மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கரூர் நகரை ஒட்டியுள்ள ஆண்டாங்கோவில் தடுப்பணையில் 14 ஆயிரத்து 570 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.