செம்மண் குவாரி வழக்கு: பொன்முடி, கெளதமசிகாமணி உள்ளிட்ட 7 பேர் ஆஜர்
நீதிபதி முன்னிலையில் செம்மன் குவாரி முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிக்கை நகலை பொன்முடி, கெளதமசிகாமணி ஆகியோர் கொடுத்து நீதிமன்ற ஊழியர் படித்து காண்பித்தார்.

விழுப்புரம் : செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மகன் கெளதமசிகாமணி உள்ளிட்ட 7 பேர் விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கில் குற்றப்பத்திரிக்கை நகல் படித்து காண்பிக்கப்பட்டு இவ்வழக்கில் மீண்டும் 24 ஆம் தேதி ஏழு பேரும் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கு
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சிக்காலத்தின் போது அளவுக்கு அதிகமாக அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
30 பேர் அரசு தரப்புக்கு எதிராக பிறழ் சாட்சியம்
இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்களில் இதுவரை 57 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். இதில் அரசு தரப்புக்கு பாதகமாக 30 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜர்
இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் முன்னாள் எம்பியுமான கெளதமசிகாமணி, சதானந்தம், கோதகுமார், கோபிநாதன் உள்ளிட்ட 7 பேர் நேரில் ஆஜராகினர். அதனை தொடர்ந்து நீதிபதி முன்னிலையில் செம்மன் குவாரி முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிக்கை நகலை பொன்முடி, கெளதமசிகாமணி ஆகியோர் கொடுத்து நீதிமன்ற ஊழியர் படித்து காண்பித்தார்.
24ம் தேதி ஏழு பேரும் நேரில் ஆஜர்ஆகவேண்டும்
அப்போது பொன்முடி, கெளதசிகாமணி குற்றப்பத்திரிகையில் தனது தரப்பு ஆட்சேபனை சிலவற்றை தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பொன்முடி தரப்பு சாட்சிகளிடம் விசாரனை செய்ய மீண்டும் வழக்கினை 24.11.2025 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அன்றைய தினம் குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேரும் நேரில் ஆஜராக முதன்மை மாவட்ட நீதிபதி மனிமொழி உத்தரவிட்டார்.





















