வேளச்சேரி தொகுதி 92ஆவது வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு
வேளச்சேரி தொகுதியில் 92ஆவது வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 6ஆம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், சென்னை வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட 92ஆவது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், வாக்குச்சாவடியில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரங்களை மாநகராட்சி பணியாளர்கள் இருவர் இரண்டு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றது பெரும் சர்சையானது. இவையெல்லாம் பழுந்தான இயந்திரங்கள் என கூறப்பட்ட நிலையில், விவிபேட்டில் 15 வாக்குகள் பதிவானது தெரியவந்தது.
இதையடுத்து, வேளச்சேரி தொகுதிகுட்பட்ட 92ஆவது வாக்குச்சாவடியில் ஏப்ரல் 17ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில், வேளச்சேரி சீதாராம் நகர் முதல் தெருவில் உள்ள டிஏவி பள்ளியில் உள்ள 92-M வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு தொடங்குகிறது. 548 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த வாக்காளர்கள் அனைவரும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்குச்சாவடியின் அருகில் உள்ள குடியிருப்பில் இவர்கள் வசிக்கின்றனர். வாக்குப்பதிவு நடைபெறும் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்காளிப்பவர்களுக்கு இடது கை நடுவிரலில் மை வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.