வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கட்... போராட்டம் அறிவித்த ரேஷன் கடை பணியாளர்களுக்கு அரசு எச்சரிக்கை
வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களுக்கு No Work No Pay என்ற அடிப்படையில் சம்பளத்தை பிடித்தம் செய்ய மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளதால் பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடந்த சில வாரங்களுக்கு முன் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் அகவிலைப்படி உயர்வு, ரேஷன் பணியாளர்களுக்கு தனித்துறை, 4ஜி சிம் கார்டு மற்றும் மோடம் வழங்குதல், ஓய்வூதியம், தரமற்ற பொருட்களுக்காக பணியாளர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது, கொரோனா நிவாரணம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கியதற்காக ஊக்கத்தொகை வழங்க வேண்டும், கண் விழித்திரை மூலம் பொருட்கள் வாங்க ஆவணம் செய்ய வேண்டும் உட்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களுக்கு No Work No Pay என்ற அடிப்படையில் சம்பளத்தை பிடித்தம் செய்ய மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஸ்ட்ரைக்கில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பதிலாக மாற்று ஊழியர்களை கொண்டு ரேஷன் கடைகளை திறந்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மத்திய அரசின் ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு என்பது ஆண்டுக்கு ஜனவரி, ஆகஸ்ட் என இருமுறை மாற்றியமைக்கப்படுவது வழக்கம். ஆனால் 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டு, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முந்தைய 3 உயர்வுகளையும் (2020 ஜனவரி, ஆகஸ்ட், 2022 ஜனவரி) 21 சதவிகிதத்தில் இருந்து 34 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.
இதேபோல் மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இது தொடர்பான போராட்டங்களும் நடந்தது. இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 சதவிகிதத்தில் இருந்து இருந்து 31 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பு ரேஷன் ஊழியர்களுக்கு மட்டும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்