Charak Shapath Oath: ராமநாதபுரத்திலும் சமஸ்கிருத உறுதிமொழி - சர்ச்சையில் சிக்கிய கல்லூரி!
மார்ச் 11ம் தேதி ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்று நடந்ததாகவும் அதில் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது
ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சரக் சபத் என்ற சமஸ்கிருத உறுதி மொழி ஏற்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. மார்ச் 11ம் தேதி ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்று நடந்ததாகவும் அதில் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் பரவி வருகிறது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி டீன்,’’ நாங்கள் இப்போகிரேடிக், சரக்சபத், கெடவெரிக் ஆகிய 3 உறுதிமொழிகளை மாணவர்கள் ஏற்றனர்’’ என்றார்
நேற்று முன் தினம் மதுரை மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, ஆட்சியர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், 2018ஆம் ஆண்டு மாணவர்கள் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்நிலையில், பாரம்பரிய ஹிப்போகிராடிக் உறுதிமொழிக்கு பதிலாக, இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சமஸ்கிருத வார்த்தைகள் கொண்ட உறுதிமொழியை ஆங்கிலத்தில் மாணவர்கள் எடுத்துள்ளனர். இந்நிலையில், பாரம்பரிய உறுதிமொழிக்கு பதிலாக சமஸ்கிருத உறுதிமொழி எடுத்ததாக தகவல் தீ போல் பரவிய நிலையில், மருத்துவ கல்வி இயக்ககம் டீன் ரத்தினவேலுவை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டது.
இது குறித்து தெரிவித்த டீன் , ''எப்போதும் மாணவர்கள் தான் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர்கள். அதன்படியே, இந்த நிகழ்வையும் மாணவர் செயலரே ஒருங்கிணைத்தார். அதன்படி, தேசிய மருத்துவ ஆணைய இணையதளத்தில் இருந்த அந்த ‘மகரிஷி சரக் சபத்’ என்ற வாக்கியம் அடங்கிய உறுதிமொழியை எடுத்து வாசித்திருக்கின்றனர்.ஆனால், அதுவும் சமஸ்கிருதத்தில் வாசிக்கப்படவில்லை. ஆங்கிலத்திலேயே அந்த உறுதிமொழி வாசிக்கப்பட்டது. இங்க யாருக்கு சமஸ்கிருதம் படிக்கவோ, புரிந்துகொள்ளவோ தெரியும் ? அதோடு, அவர்கள் இந்த உறுதிமொழியை படித்த பிறகுதான் எனக்கே தெரியும். அதுவரை எனக்கு இதைதான் படிக்கப்போகிறார்கள் என்று கூட தெரியாது. இது மாணவர்களால் எடுக்கப்பட்டது. எப்போதும் வாசிக்கப்படும் உறுதிமொழி என்பதாலேயே நான் உள்பட யாரும் அதில் என்ன மாற்றம் செய்துவிடப்போகிறார்கள் என்று கவனிக்காமல் இருந்துவிட்டோம் என்றார்.
இதற்கிடையே, மதுரை மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற சரக்பத் உறுதிமொழி ஆங்கிலத்தில்தான் எடுக்கப்பட்டது. தேசிய மருத்துவ ஆணையத்தின் சுற்றறிக்கைப்படியே வைட்கோட் செர்மனி, சரக்சபத் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தேசிய மருத்தவ ஆணைய சுற்றறிக்கை குறித்து அறிவுறுத்தல் எதுவும் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து வரவில்லை. மதுரை மருத்துவ கல்லூரி டீன் பொறுப்பில் இருந்த ரத்தினவேலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்