karunanidhi Death anniversary : கலைஞரின் வாழ்க்கை நம்மை வழிநடத்தும் - ராகுல் காந்தி
நவீன தமிழ்நாட்டை உருவாக்கியதில் தலைவர் கலைஞர் கருணாநிதியின் பங்கு அளப்பரியது - ராகுல் காந்தி
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி நினைவு கூர்ந்தார்.
இதுகுறித்து வெளியிட்ட நினைவு குறிப்பில், "நவீன தமிழ்நாட்டை உருவாக்கியதில் தலைவர் கலைஞர் கருணாநிதியின் பங்கு அளப்பரியது. மூன்றாம் ஆண்டு நினைவு தினமான இன்று அதை நினைவு கூறுகிறேன்.
தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, லட்சக்கணக்கான விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சமூகப் புரட்சியாளர் மட்டுமல்ல, கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தின் மூலம் பிராந்திய அபிலாஷைகளை அங்கீகரிப்பதை உறுதி செய்ய போராடினார். அவர் அமைத்த அடித்தளம் தான், பலதரப்பட்ட கலாச்சாரா அடையாளங்களைத் தழுவுவதற்கும் பாதுகாப்பதற்கும் தொடர்ந்து ஊக்குவிக்கிறது. மேலும், அனைவரையும் உள்ளடக்கிய உண்மையான தேசத்தையும் கட்டமைக்கிறது.
பிற்போக்குத்தனமான மதிப்புகளை திணிக்கும் முயற்சிக்கு எதிராக நாம் போராடும் இன்றைய சூழலில், உங்கள் தந்தையின் வீரமிக்க போராட்டம் மற்றும் வளர்ச்சிக்கான கொள்கைகளை முன்னெடுத்து செல்ல அவர் உருவாக்கிய மக்கள் இயக்கத்திலிருந்து நாம் வலிமை பெறுகிறோம். அவரது வாழ்க்கை நமது இந்த பயணத்தில் வழிகாட்டும்" என முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ராகுல் காந்தி எழுதிய கடிதத்தில் தெரிவித்தார்.
கலைஞர் நினைவுதினம்: முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதியின் 3ஆவது நினைவு தினம் தமிழ்நாடும் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பல இடங்களில் கருணாநிதியின் உருவப்படம் வைக்கப்பட்டு அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. கட்சியின் சார்பாக அந்தந்த பகுதிகளில் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
முன்னதாக, கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மேலும், தனது ட்விட்டரில், ” நம் நெஞ்சங்களில் நிறைந்து நம்மை இயக்கும் தலைவர் கலைஞரின் நினைவுநாள்! தலைவரை - தமிழன்னையின் தலைமகனை நாம் பிரிந்து மூன்றாண்டுகள் ஆகின்றது. அவரது சொற்களும் எண்ணங்களும் நம் திசைமானி; அவர் காட்டிய வழி நடப்போம்! சமத்துவ சமுதாயம் அமைப்போம்!
தனக்குப் பிறகும் தான் இருந்து நடத்துவதை போலவே கட்சியும் ஆட்சியும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் தலைவர் கலைஞர்; அந்த ஆசையை இந்த மூன்றாண்டு காலத்தில் நிறைவேற்றி வருகிறேன் என்பதே எனது நிம்மதிப் பெருமூச்சு!” என்று பதிவிட்டார்.
மேலும், வாசிக்க:
’ஓய்வெடுக்கும் ஓய்வறியாச் சூரியன்’ - திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி அரசியல் தருணங்கள்!
’அண்ணாவின் இதயத்தை இரவலாய் பெற்றவன்’ - ஈடில்லா கருணாநிதி... நினைவுதினம்!