ஆபரேஷன் போது பெண் வயிற்றினுள் மருத்துவ உபகரணம்: ரூ. 7.20 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு
அறுவைச் சிகிச்சையின் போது மருத்துவ உபகரணத்தை (ஆர்ட்ரி பார்செப்ஸ்) பெண்ணின் வயிற்றுக்குள் வைத்துத் தைத்த சம்பவத்தால் பரபரப்பு.
புதுச்சேரி : அறுவைச் சிகிச்சையின் போது மருத்துவ உபகரணத்தை பெண்ணின் வயிற்றுக்குள் வைத்துத் தைத்த சம்பவத்தால் பரபரப்பு. புதுச்சேரி நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாவதி. இவர் கடந்த 2009 ஆண்டு கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பிரசவ சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அதன் பின்பு வீடு திரும்பினார். ஆனால், அவருக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்தது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்ததால் ஏற்பட்ட வலி என பொறுத்து கொண்டார்.
வயிற்றில் ஆர்ட்ரி பார்செப்ஸ் உபகரணம்
அதிக வலி ஏற்பட்டதால் கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். மருந்து மாத்திரை அளித்த டாக்டர்கள், உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தினர். வலி குறையாததால் தனியார் டாக்டரிடம் சிகிச்சை பெற்றார். அப்போது, குடல்வால் பிரச்னை இருக்கலாம் என சந்தேகப்பட்டது. இதனால், மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கடந்த 2010 நவம்பரில் குடல் வால் நீக்க அறுவை சிகிச்சை செய்ய பிரபாவதியின் வயிற்று பகுதியை பார்த்தபோது, வயிற்றுப்பகுதியில் அறுவை சிகிச்சையின் போது வைக்கப்பட்ட மருத்துவ உபகரணமான 'ஆர்ட்ரி பார்செப்ஸ்' உள்ளே இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அங்கிருந்து அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அன்றைய தினமே பிரபாவதி மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பல நாட்களாக வயிற்றில் ஆர்ட்ரி பார்செப்ஸ் உபகரணம் இருந்தால் அதன் மீது கொழுப்பு போன்ற திரவம் மூடி இருந்தது. அறுவை சிகிச்சை செய்து ஆர்ட்ரி பார்செப்ஸ் உபகரணம் மற்றும் குடல்வாவும் எடுக்கப்பட்டது.
அரசு மருத்துவமனை டாக்டர் விசாரணையில் கவன குறைவாக மருத்துவ உபகரணம் வயிற்றில் வைக்கப்பட்ட இருந்தது தெரியவந்தது. 10 மாதங்களாக கடும் வயிற்று வலியுடன் வாழ்ந்ததாகவும், மருத்துவர்களின் கவன குறைவால் தனக்கு ஏற்பட்ட சேவை குறைபாடுக்கு 10 லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டு தனியார் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ரூ. 7 லட்சம் நஷ்டஈடு
இந்த நிலையில் புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணைய தலைவர் முத்துவேல் மற்றும் உறுப்பினர்கள் கவிதா, ஆறுமுகம் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், தனியார் மருத்துவக் கல்லுாரி நிர்வாகம், பிரபாவதிக்கு மகப்பேறு அறுவை சிகிச்சை செய்த பொழுது கவனக்குறைவாக மருத்துவ உபகரணத்தை நோயாளியின் வயிற்றில் வைத்து தைத்ததால், பல்வேறு தொல்லைகளுக்கும், உடல் உபாதைகளுக்கும் ஆளாகி உள்ளார்.
எனவே, பிரபாவதிக்கு ரூ. 7 லட்சம் நஷ்டஈடு, வழக்குத் தொகையாக ரூ. 20,000 என மொத்தம் ரூ. 7 லட்சத்து 20 ஆயிரம் மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் தீர்ப்பின் நகல் கிடைத்த 45 நாட்களுக்குள் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் 9 சதவீதம் ஆண்டு வட்டி மேற்படித்தொகை செலுத்தும் வரை கொடுக்க உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.