குப்பை புகாரா? இனி ஒரு 'மெசேஜ்' போதும்! - புதுச்சேரி அரசின் புதிய வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!
புதுச்சேரியில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான பொதுமக்களின் புகார்களை விரைவாகத் தீர்வு காணும் வகையில் புதிய வாட்ஸ்அப் குறைதீர்ப்பு சேவையை உள்ளாட்சித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதுச்சேரி: புதுச்சேரியில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான பொதுமக்களின் புகார்களை விரைவாகத் தீர்வு காணும் வகையில் புதிய வாட்ஸ்அப் குறைதீர்ப்பு சேவையை உள்ளாட்சித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் திடக்கழிவு மேலாண்மையை மேலும் வலுப்படுத்தவும், பொதுமக்கள் சந்திக்கும் குப்பை தொடர்பான புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும் உள்ளாட்சித்துறை ஒரு புதிய வாட்ஸ்அப் குறைதீர்ப்பு சேவையைத் தொடங்கியுள்ளது.
புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்:
புதுச்சேரியைத் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்தச் சேவையின் மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை 99440 33399 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம்.
என்னென்ன புகார்களைத் தெரிவிக்கலாம்?
திடக்கழிவு மேலாண்மை தொடர்பாகப் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பின்வரும் பிரச்சனைகளுக்கு இதன் மூலம் தீர்வு பெறலாம்:
வீடுகள்தோறும் தினசரி குப்பைகள் சேகரிக்கப்படாமல் இருப்பது.
தெருக்களில் வைக்கப்பட்டுள்ள பொதுக் குப்பைத்தொட்டிகள் நிரம்பி வழிவது.
சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் குப்பைகள் தேங்கிக் கிடப்பது.
மழைநீர் வடிகால்கள் மற்றும் சாக்கடைகள் முறையாகச் சுத்தம் செய்யப்படாமல் இருப்பது.
தெருக்களில் உயிரிழந்த கால்நடைகளின் உடல்கள் அகற்றப்படாமல் இருப்பது.
புகார் அளிக்கும் முறை:
பொதுமக்கள் மேற்கண்ட பிரச்சனைகள் குறித்து வாட்ஸ்அப்பில் புகார் பதிவு செய்யும்போது, சம்பவ இடத்தின் துல்லியமான புகைப்படம் (Photo) மற்றும் இருப்பிட விவரத்தை (Location) இணைத்து அனுப்ப வேண்டும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட பகுதி ஊழியர்கள் உடனடியாகச் செயல்பட எளிதாக இருக்கும்.
3 முதல் 6 மணி நேரத்திற்குள் நடவடிக்கை:
பெறப்படும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட உள்ளாட்சித்துறை அதிகாரிகள் மற்றும் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் 3 முதல் 6 மணி நேரத்திற்குள் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரச்சனை சரிசெய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த நிறுவனங்களுக்கு எச்சரிக்கை:
இதுகுறித்து உள்ளாட்சித்துறை இயக்குநர் ஆதர்ஷ் தெரிவிக்கையில், "பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களைக் குறிப்பிட்ட 3 முதல் 6 மணி நேரத்திற்குள் சரிசெய்யத் தவறினாலோ அல்லது ஒப்பந்த நிபந்தனைகளை மீறிச் செயல்பட்டாலோ, சம்பந்தப்பட்ட தூய்மைப் பணி ஒப்பந்த நிறுவனங்கள் மீது ஒப்பந்த விதிகளின்படி கடுமையான நடவடிக்கைகள் மற்றும் அபராதம் விதிக்கப்படும்" என எச்சரித்துள்ளார்.
மேலும், புதுச்சேரியை முற்றிலும் தூய்மையான மற்றும் சுகாதாரமான நகரமாக மாற்றும் அரசின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கி, இந்த வாட்ஸ்அப் சேவையைப் பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Before You Go
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















