புதுச்சேரியில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை... ஓடையில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவர் உயிரிழப்பு
புதுச்சேரியில் நேற்று நள்ளிரவு செய்து கனமழையால் போக்குவரத்து ஸ்தம்பதித்த நிலையில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது இந்த நிலையில் நேற்று இரவு புதுச்சேரியில் சுமார் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
பிரதான சாலையில் குளம் போல் தேங்கிய மழை நீர்
புதுச்சேரியில் நேற்று இரவு 7 மணி அளவில் இடி மின்னலுடன் கனமழை பெய்யத்தொடங்கியது. தொடர்ந்து நள்ளிரவு 11 மணி வரை இடைவிடாது மழை நீடித்தது. இந்த மழை காரணமாக புதுச்சேரி நகரின் பிரதான சாலைகளான அஜந்தா சிக்னல், அண்ணா சாலை, ராஜா தியேட்டர் சந்திப்பு, நேரு வீதி, காந்தி வீதி, புஸ்சி வீதி, காமராஜர் சாலை உள்பட புதுச்சேரி முழுவதும் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி குட்டை போல் காட்சியளித்தது.
மேலும் ரெயின்போ நகர், சாரம், லாஸ்பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த மழையால் பிரதான சாலைகளில் முழங்கால் வரை மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஓடையில் மூழ்கிய நபர் சடலமாக மீட்பு
இந்நிலையில், கனமழையின் காரணமாக ஜீவானந்தபுரம் ஒடையில் அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன் (40) என்பவர் அடித்து செல்லப்பட்டடார். அவரை தேடும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று காலை இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக புதுச்சேரியில் இன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொடரும் கனமழை
பருவக்காற்றின் வேக மாற்றம் காரணமாக, தமிழகத்தில் பெய்து வரும் மாலை மற்றும் இரவு நேர மழை, மேலும் சில நாட்கள் தொடரும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை நோக்கி நகரும் காற்று
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் தற்போது பரவலாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடனான மிதமான மழை, அடுத்த சில நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளது.
நாளையதினம் கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 12ல், நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது