'கணவன் மீது முன்னாள் பெண் அமைச்சர் சரமாரி புகார்’ விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு..!
'குடிகாரர், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமை செய்பவர், தன்னை பற்றி அவதூறுகளை பரப்புபவர்’ என ஏகப்பட்ட புகார்களை சந்திரபிரியங்கா அடுக்கியுள்ளார்
புதுச்சேரி மாநில முன்னாள் பெண் அமைச்சர் சந்திரபிரியங்கா தனது கணவரிடமிருந்து விவகாரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைகளில் சிக்கிய சந்திரபிரியங்கா
புதுச்சேரியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் சந்திரபிரியங்கா. அவரின் நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ரங்கசாமிக்கு பல்வேறு புகார்கள் சென்ற நிலையில், அதிருப்தி அடைந்த அவர் சந்திரபிரியங்காவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்ற ஆளுநர் தமிழிசை சந்திரபிரியங்காவை அமைச்சரவையில் நீக்கி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், தனது செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்த சிலருக்காக அமைச்சராக பதவி வகித்த 3 வருடங்களில் என்னென்ன செய்தேன் என்ற பட்டியலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார் சந்திரபிரியங்கா.
அரசியல் சூழ்ச்சியில் சிக்கினாரா பிரியங்கா ?
அதோடு, தான் அரசியல் சூழ்ச்சியில் சிக்கியுள்ளதாகவும், மக்கள் செல்வாக்கு இருந்தாலும் பணம் என்ற பெரிய பூதத்துடன் போரிடுவதும் சூழ்ச்சி அரசியலை எதிர்ப்பதும் அவ்வளவு சுலபம் இல்லை என்பதை உணர்ந்துவிட்டேன் என புதுச்சேரி மக்களுக்கு பகிரங்க கடிதம் ஒன்றையும் சந்திரபிரியங்கா எழுதியிருந்தார். அதில், பணத் திமிரோடு இருக்கும் எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவியை கொடுத்துவிட வேண்டாம் என்றும் முத்லவர் ரங்கசாமிக்கு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
— Chandirapriyanga (@SPriyanga_offl) October 10, 2023
அவர் பதவி பறிக்கப்பட்டு பின்னரும் கட்சி நிகழ்ச்சிகள், நெடுங்காடு - கோட்டச்சேரி சட்டமன்ற உறுப்பினராக களத்தில் பணியாற்றி வந்ததுடன், தன்னுடைய பணிகளை அவ்வப்போது சமூக வலைதளத்திலும் பதிவிட்டு வந்தார். அவரை ஏராளமான சர்ச்சைகள் சுற்றி வந்த நிலையில், இப்போது தனது கணவனிடமிருந்து விவாகரத்து கேட்டு புதுச்சேரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து புதிய சர்ச்சையை அவரே ஏற்படுத்தியுள்ளார்.
கணவர் கொடுமைப்படுத்தினார் - சந்திரபிரியங்கா
அவரது கணவர் சண்முகம் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் அவர் ஒரு குடிகாரர், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தன்னை கொடுமைப்படுத்தியவர் என்றும் அதோடு தன்னை பற்றி சர்ச்சைகளை ஏற்படுத்தும் ஒருவருடன் வாழ தனக்கு துளியும் விரும்பம் இல்லை என அடுக்கடுக்காக ஏகப்பட்ட புகார்களை அந்த விவகாரத்து மனுவில் சந்திரபிரியங்கா குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எப்போது எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்லும் கணவனும் மனைவியும் கடந்த சில மாதங்களுக்கு இருவருக்குள்ம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஒன்றாக இருக்கும்போது தான் அடிக்கும் போஸ்டர்களில் கூட கணவன் பெயரையும் புகைப்படத்தையும் விட்டுவிடாமல் சேர்த்து அச்சிட்ட சந்திரபிரியங்கா இப்போது அவர் மீது திடீரென அடுக்கடுக்கான புகார்கள் எழுப்பியுள்ளது ஆச்சரியத்தை ஏற்டுத்தியுள்ளது.
தானே ஆஜரான பிரியங்கா
கடந்த சில நாட்களுக்கு முன் சந்திரபிரியங்காவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது கணவர் சண்முகம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி டி.ஜி.பி. ஸ்ரீநிவாசை சந்தித்து சந்திரபிரியங்கா புகார் தெரிவித்தார். இந்தநிலையில் சந்திரபிரியங்கா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு காரைக்கால் குடும்பநல கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார். வழக்குரைஞர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், சந்திரபிரியங்கா தானே நேரடியாக குடும்பநல நீதிபதி அல்லி முன்பு ஆஜராகி மனுவை தாக்கல் செய்தார்.
மனுவில் சொன்னது என்ன ?
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தான் ஏற்கனவே வகித்த அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி பல்வேறு இடங்களில் முறைகேடுகளில் சண்முகம் ஈடுபட்டதாகவும், அதனை தட்டி கேட்டதால் அதிகார வட்ட நண்பர்கள் மற்றும் தரகர்கள் மூலம் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும், அரசியல் வாழ்க்கையில் எழுச்சி பெறுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் தன்னை சண்முகம் கட்டுப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகளை சந்திரபிரியங்கா முன் வைத்துள்ளார். மேலும் குடிகாரன், பெண் வெறியன், தன் மனைவிக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமை செய்யும் ஆண், தன்னைப் பற்றி கிசுகிசுக்களைப் பரப்பும் மற்றும் பேசும் ஒரு ஆணுடன் வாழ வேண்டாம் என விவாகரத்து பெற முடிவு செய்து இதை தாக்கல் செய்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. கணவருடனான சந்திரபிரியங்காவின் மோதல் தற்போது விவாகரத்து நீதிமன்றம் வரை சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.