‛இஸ்லாமிய வாக்குகளை வாங்கிவிட்டு.. அவர்களையே கிள்ளுக்கீரையாக்குவதா’ -ராஜினாமா செய்த நிர்வாகி!
‛இஸ்லாமியர்களின் வாக்குகளால் வில்லியனூர் தொகுதியில் வெற்றிபெற்ற சிவா எம்.எல்.ஏ அவர்கள், இஸ்லாமியர்களை ஒதுக்கும் விதமாக நடந்து கொண்டிருக்கிறார்’
புதுச்சேரியில் திமுக கட்சியின் இளைஞரணி அமைப்பாளரான முகமது யூனுஸ் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தெரிவித்திருப்பதுடன், கட்சியின் மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எம்.எல்.ஏ சிவா தன்னையும் இஸ்லாமியர்களையும் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார். ரம்ஜான் தினத்தையொட்டி சுல்தான்பேட்டை பள்ளிவாசலில் தொழுகை நடைப்பெற்றது.
தொழுகை முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனுஸ் கூறியதவாது:-
கடந்த இரண்டு ஆண்டுகாலமாக கொரோனா நேரத்தில் வில்லியனூர் தொகுதி முழுவதும் அனைத்து விதமான உதவிகளையும் செய்திருக்கிறேன். அதனால், எனது முழு பொருளாதாரத்தையும் இழந்திருக்கிறேன். ஆனாலும் மாநில அமைப்பாளரான அண்ணன் சிவா கேட்டுக் கொண்டதற்காக தொகுதியையும் விட்டுக்கொடுத்தேன். அவருடைய வெற்றிக்காக அரும்பாடுபட்டும், இன்று வெற்றிபெற்ற பிறகு நம்மை ஓரம்கட்டும் விதமாக, இளைஞரணி அமைப்பாளர் என்ற மரியாதையைக் கூட கொடுக்காமல் எங்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொள்கிறார். நான் திமுகவைச் சேர்ந்தவன் அதனால் தன்மானமும், சுயமரியாதையும் அதிகமுள்ளவன். அந்த சுயமரியாதை கெடுகின்றபோதும், தன்மானத்திற்கு இழுக்கு வருகின்றபோதும் எவ்வளவு தாக்குப் பிடித்தாலும் எங்களை கேவலப்படுத்திகிறார்கள். எந்த கூட்டத்திலும் பேசுவதற்குக் கூட வாய்ப்பு கொடுப்பதில்லை.
நிகழ்ச்சி அமைப்பாளரிடம் கேட்டாலும் நான் பேசக் கூடாது என்று மாநில அமைப்பாளர் அருதியிட்டு கூறுகிறார். தொடர்ந்து அனைத்து இடங்களிலும் எங்களை ஒதுக்குகிறார். குறிப்பாக இஸ்லாமியர்களின் வாக்குகளால் வில்லியனூர் தொகுதியில் வெற்றிபெற்ற சிவா எம்.எல்.ஏ அவர்கள், இஸ்லாமியர்களை ஒதுக்கும் விதமாக நடந்து கொண்டிருக்கிறார். புதுச்சேரியின் மாநில இளைஞரணி அமைப்பாளராக இஸ்லாமியராக நான் இருக்கிறேன். என்னை அழைக்காமல் இவர்கள் திருக்கனூருக்கு சென்று இஃப்தார் நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.
ஆனால், அந்த பள்ளிவாசலில் இவர்களை அனுமதிக்கவே இல்லை. தெருவில் அமர்ந்து நோன்பை திறந்து வைத்துவிட்டு வந்தார்கள். ஆனால் நாங்கள் இருந்திருந்தால் இந்த அவமானம் நிச்சயம் நடந்திருக்காது. இஸ்லாமியர்களின் வாக்குகளை வாங்கிவிட்டு, அவர்களை கிள்ளுக்கீரையாக கையாள்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நான் வகித்து வந்த மாநில இளைஞரணி அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன். கனத்த இதயத்துடன் திமுகவிலிருந்து வெளியேறுகிறேன். தற்போது மாநில அமைப்பாளராக உள்ள சிவா என்னை ஒழித்துக் கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறார்.
அவர் எம்எல்ஏவாக பதவி ஏற்ற பிறகு இஸ்லாமிய மக்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். தேர்தலின் போது இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற்றவர் ரம்ஜான் பண்டிகைக்காக ஒரு இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியை கூட நடத்தவில்லை. 1991ம் ஆண்டு முதல் சுமார் 30 ஆண்டு காலம் திமுகவில் கட்சி பணியாற்றி வருகிறேன்.
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இளைஞரணி செயலாளர் ஆகியோரின் சொல்படி நடந்துகொண்டேன். 2012ம் ஆண்டு முதல் மாநில இளைஞரணி அமைப்பாளராக இருக்கிறேன். கட்சித் தலைமைக்கு எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டேன். மேலும் புதுவையில் நடக்ககூடிய கூடுதல் விவரங்களையும் தலைமைக்கு அனுப்ப இருக்கிறேன் என கூறினார்.