ஆரோவில்லின் 54வது உதய தினம் - ‘போன் பயர்’ ஏற்றி வாசிகள் கூட்டு தியானம்
ஆரோவில்லின் 54வது உதய தினமான இன்று அதிகாலை அலங்கார தீபம் ஏற்றி ஆரோவில் வாசிகள் தியானத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்: சர்வதேச நகரமான ஆரோவில்லின் 54வது உதய தினமான இன்று அதிகாலை அலங்கார தீபம் ஏற்றி ஆரோவில் வாசிகள் தியானத்தில் ஈடுபட்டனர். சர்வதேச நகரம் ஆரோவில். இது, ஐ.நா.வின் யுனெஸ்கோ உதவியுடன் அமைக்கப்பட்ட பன்னாட்டு கிராமிய நகர சங்கமமாகும். உலக மக்கள் ஒரு இடத்தில் நாடு, மதம், மொழி, கலாச்சாரம் என வேறுபாடுகளை மறந்து ஒன்றாக கூட இடம் வேண்டும் என மகான் அரவிந்தர் விரும்பினார். அவரது கனவை நிறைவேற்ற ஆரோவில் என்னும் சர்வதேச நகரை உருவாக்கியவர் அவரது சீடரான அன்னை மிர்ரா. உலகில், மனித இன ஒற்றுமையின் சின்னமாக, சர்வதேச நகரை உருவாக்க வேண்டும் என்ற கருத்து முதன் முதலாக மகான் ஸ்ரீஅரவிந்தர் எழுத்துக்களில் இருந்து தோன்றியது. ஆரோவில் குறித்த பொது அறிக்கை 1965ல் வெளியிடப்பட்டது. 1966ல் ஆரோவில் குறித்த திட்டம், 'யுனெஸ்கோ' பொது சபையில் இந்திய அரசால் வைக்கப்பட்டு ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
அரவிந்தர் ஆசிரம அன்னை ஸ்ரீ மீர்ராவின்பெரும் முயற்சியால், 1968, பிப்ரவரி 28ல், ஆரோவில் சர்வதேச நகரம் துவங்கப்பட்டது. உலகின் 121 நாடுகளிலிருந்தும் இந்தியாவின் 25 மாநிலங்களில் இருந்தும் பிடி மண் எடுத்து வரப்பெற்று இந்த இடத்தில் கூம்பு உருவாக்கப்பட்டது. நகரம் துவக்கப்பட்ட நாளில் இருந்து ஆண்டு தோறும் ஆரோவில் உதய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் உலகெங்கும் இருந்து வந்து குடியேறி இருக்கும் மக்கள் ‘போன் பயர்’ எனப்படும் அலங்கார தீபம் ஏற்றி கூட்டு தியானத்தில் ஈடுபடுவது வழக்கம்.
இந்த நிலையில் 55வது உதய தினமான இன்று ஆரோவில்லில் வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், பொது மக்கள் ஆகியோர் மாத்திர் மந்திர் அருகில் அமைந்துள்ள ஆம்பி தியேட்டரில், அதிகாலை, 5 மணிக்கு கூடினர். 'போன் பயர்' எனப்படும் அலங்கார தீபம் ஏற்றப்பட்டு 6 மணி வரை, கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். தீப்பிழம்பின் பின்னணியில், மாத்திரி மந்திர் தங்க நிறத்தில் ஜொலித்தது. நிகழ்ச்சியின் துவக்கத்திலும் முடிவிலும் ஆரோவில் எதற்காக துவக்கப்பட்டது என அன்னை ஸ்ரீமீர்ரா 1971ம் ஆண்டு இதே நாளில் ஆற்றிய உரை ஒலிபரப்பப்பட்டது. மேலும் மகான் அரவிந்தரின் ஆன்மீக உரையும் வெளியிடப்பட்டது.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்