வைரஸைப்போல நம்மை நாமே புதுப்பிக்க மறுக்கிறோம் - கவனத்தில் கொள்ளுங்கள்.. மருத்துவர் ஹரிநிவாஸின் முக்கிய அப்சர்வேஷன்..
முதல் அலையை விட நோய்த்தொற்று மட்டுப்படும் நிலையை எட்ட கூடுதல் காலமாகும். ஆகவே, அதிக கொரோனா பாதிப்பு = கூடுதலாக நோய்வாய்ப்படுவது = அதிக மரணங்கள். மரண விகிதம் கண்மண் தெரியாமல் கூடிக்கொண்டு போகிறது
"கோவிட் 19- கவனத்தில் கொள்ளவேண்டியவை" என்னும் தலைப்பில் முதுநிலை உள்ளுறை மருத்துவர் ஹரிநிவாஸின் (Dr.Harinivas) முக்கிய கருத்துக்களை, ஐ.ஆர்.எஸ் அதிகாரி பூ.கொ.சரவணன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தமிழில் தொகுத்து அளித்திருக்கிறார்.
1. அதிகாரப்பூர்வமாக இரண்டாவது கொரோனா அலையின் உச்சத்தின் ஆரம்பகட்டத்தில் இருக்கிறோம். பெருந்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை எகிறிக்கொண்டே இருக்கிறது. இனிவரும் வாரங்களில், இன்னமும் கொரோனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. முதல் அலையை விட நோய்த்தொற்று மட்டுப்படும் நிலையை எட்ட கூடுதல் காலமாகும். ஆகவே, அதிக கொரோனா பாதிப்பு = கூடுதலாக நோய்வாய்ப்படுவது = அதிக மரணங்கள். மரண விகிதம் கண்மண் தெரியாமல் கூடிக்கொண்டு போகிறது.
2. தற்போது மக்களிடையே பரவிக்கொண்டிருக்கும் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தண்ணீர் காட்டிக்கொண்டிருக்கிறது. கடந்தகால கொரோனா தொற்றில் இருந்து கிட்டிய நோய் எதிர்ப்புத்திறனை அது எப்படியோ சமாளித்து தாக்குகிறது. ஆகவே, மீண்டும் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு இன்னமும் உண்டு. மிதமான அளவில் நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாவதற்கான வாய்ப்புகள் அப்படியே இருக்கிறது. ஏற்கனவே நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் நமக்கு ஒன்றும் ஆகாது என்று அச்சமின்றி இருக்க இயலாது. மீண்டும் ஏற்படக்கூடிய கொரோனா நோய்த்தொற்றால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி மரணமடையக்கூடிய வாய்ப்பு அறவே இல்லையென்றெல்லாம் சொல்லிவிட முடியாது.
3. களத்தில் கொரோனாவோடு போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு மருத்துவரும் காண்பது என்ன தெரியுமா? கொரோனாவால் மரணிப்பவர்களின் சராசரி வயது குறைந்து கொண்டே போகிறது. அதாவது, இளம் வயதினர் கூட கடுமையான நிமோனியா/கடுமையான சுவாசத் தொற்றால் பாதிக்கப்பட்டு இந்த கொரோனா அலையில் சாகப் போகிறார்கள். மோசமான ஆட்சி நிர்வாக அணுகுமுறையால், அதிக நோய்த்தொற்று ஆபத்துள்ள இளம் வயதினருக்கு தடுப்பு மருந்து கிட்டவில்லை என்பது துயரகரமானது. மழலைகள், குழந்தைகள் கூட பாதிப்புக்கு உள்ளாக்குகிறார்கள். தனியாக நோய் ஆபத்தை கூட்டும் காரணிகள், நோய்க்கு ஆளாகும் வாய்ப்புள்ள வயதினர் என்று தனியாக எதுவுமில்லை. எல்லாரும் ஆபத்தில் இருக்கிறோம். உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
4. பேறுகால மரணங்களின் எண்ணிக்கை எச்சரிக்கை மணி அடிக்கிறது. கடந்த கொரோனா அலையில் பேறுகால மரணங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இந்த முறை அப்படியில்லை. திருச்சியின் உயர்சிகிச்சை மையத்தில் இரண்டே வாரத்தில் ஐந்து கர்ப்பிணிகள் இறப்பதை கண்டேன். ஏராளமான கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர். இந்த நோய்த்தொற்று ஆபத்து உள்ள கர்ப்பிணிகளுக்கும் தடுப்பு மருந்து தர இயலாது. இப்பெண்களை எப்படி காப்பாற்றப் போகிறோம் என்று எனக்கு புலப்படவில்லை. கொடூரமிக்க வைரஸ் அரக்கன் கர்ப்பிணிக்களின் உயிரை காவு வாங்கப் போகிறான். ஆகவே, கர்ப்பிணிகளே பாதுகாப்பாக இருங்கள்.
5. ஆக்சிஜன் பற்றாக்குறையோடு ஆனந்தமாக உலவுவதும் பெருமளவில் கூடியிருக்கிறது. 70% அளவுக்கு ஆக்சிஜன் அளவோடு மருத்துவமனைக்குள் சுயநினைவோடு பலர் நுழைகிறார்கள். இது இப்படியே தொடவேண்டும் என்று நம்ப முடியாதது. உங்களின் ஆக்சிஜன் அளவு குறைவதற்கான எல்லா வாய்ப்புகளும் உண்டு. உடல்நலமிக்க இளைஞர்கள் தங்களுடைய மூச்சுவிடும் அளவை அதிகரிப்பதன் மூலம் இதனை எதிர்கொள்ள முடியும். உங்களின் கையில் இருக்கும் PULSOXIMETER 90% க்கு மேல் ஆக்சிஜன் இருப்பதாக சொல்வதை நம்பி ஏமாந்துவிட வேண்டாம். அதனாலேயே நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று பொருளில்லை. எப்படி நிமிடத்திற்கு உங்களின் மூச்சுவிடும் அளவு இருக்கிறது என்று கவனிப்பது கூடுதல் பலனைத் தரும்.
6. விளக்க முடியாத அளவுக்கு சோர்வும், பசியுணர்ச்சி இழப்பதும் முதன்மையான கொரோனா அறிகுறிகள். வாந்தி, வயிற்றுப்போக்கு முதலிய அறிகுறிகளும் காணப்படுகின்றன. இவை எதையும் அசட்டையாக விட்டுவிட வேண்டாம். வயதானவர்களுக்கு கடும் சுரம் வருவதில்லை. அதேபோல, எத்தனை நாட்களுக்கு தொற்றின் வீரியம் அதிகரிக்கிறது என்பதையும் துல்லியமாக சொல்ல இயலவில்லை. சிலர் 2 நாட்களிலேயே உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜன் போதாமல் அவதிப்படுகிறார்கள். சிலர் கடுமையான சுவாசத் தொற்றிற்கு ஆளாக 7 முதல் பத்து நாட்கள் பிடிக்கிறது. நெடுங்காலம் உடல்நலம் சீராக இருந்து, சிறு அழுத்தத்தில் உடல்நலம் நலிவதும் நிகழ்கிறது. வைரஸ் தன்னை தொடர்ந்து புதுப்பித்து கொண்டு தாக்குகிறது.
7. நாம் வைரசைப்போல நம்மை புதுப்பித்துக்கொள்ள மறுக்கிறோம். இன்னமும் பெருமளவில் பொறுப்பற்று திரிகிறோம். துவைக்காத துணி முகக்கவசத்தை மூக்கை மூடாமல் அணிந்து கொண்டு திரிகிறோம்.. 3 ply surgical double mask கூட பெருங்கூட்டம் கூடும் இடங்களில் போதாது. அன்றாட வேலை பார்க்கும் இடங்களில் எளிமையான சர்ஜிக்கல் மாஸ்க் போதுமானது. தயவு செய்து, உயிர்காக்கும் முகக்கவசங்களை அணியுங்கள். ஒரு மாஸ்க் அதிகபட்சம் ஐந்து ரூபாய் இருக்கும். உங்கள் உயிர்விலைமதிப்பற்றது. தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். உங்கள் உடல்நலத்தில், குடும்பத்தினர்/நண்பர்கள் உடல்நலத்திலும் அக்கறை காட்டுங்கள்.
8. பெரும்போரின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு திட்டமிடவும், வியூகம் வகுக்கவும் அரசுகள் வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ளும் முறையே லாக்டவுன்கள். இந்த போர்களை ஒரு முனையில் வென்றுவிட இயலாது. நம்முடைய தடுப்பரணல் அவ்வளவு ஓட்டைகள். சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறுகிறோம். முறையாக முகக்கவசம் அணிவதில்லை. மிகமிக அவசியம் என்றால் மட்டுமே வெளியே வரவேண்டும், மற்ற நேரங்களில் உள்ளேயே இருக்க வேண்டும் என்பதை கடைபிடிக்க மறுக்கிறோம். அரசும், சுகாதார கட்டமைப்பும் களத்தில் போரிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு எல்லாம் அவமானமாக இல்லையா? இப்படி முட்டாள்தனமாக நடந்து கொண்டிருந்தால் லாக்டவுன் நீடிக்கவே செய்யும்.
9.ஆக்சிஜன் படுக்கைகளை பெருக்குவதும், உயர்தர சிகிச்சைகளை மேம்படுத்துவதும் நோய்த்தொற்றை எதிர்கொள்ளும் அணுகுமுறையின் ஒரு பகுதி மட்டுமே. ஆரம்ப,அடிப்படையான மட்டங்களில் சுகாதார சிக்கல்களை சரிசெய்ய வேண்டும். இல்லையென்றால் அதல பாதாளத்துக்கு நிலைமை போவதை இயலாது. கண்ணிமைக்கும் கணத்திற்குள் உயிர்கள் . இந்த போரில் பங்கெடுக்க விரும்பினால், தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். உங்கள் சொந்தக்காரர்கள்,பக்கத்து வீட்டினர் என்று அனைவரையும் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள வையுங்கள். தடுப்பு ஊசி போடும் இடங்களுக்கு முண்டியடித்து கொண்டு சென்று, கூட்டம் கூட்ட வேண்டாம். தடுப்பு முறைகளை .பின்பற்றுங்கள். அடிப்படைகளை கவனத்தில் கொள்ளுங்கள். தமிழ்நாடு இந்தியாவிலேயே தடுப்பு ஊசி எடுத்துக்கொள்ளும் மாநிலங்களில் கடைசி மூன்று இடத்தில் தள்ளாடிக்கொண்டு நிற்கிறது. 100-ல் எட்டு பேர் மட்டுமே தடுப்பு ஊசி போட்டிருக்கிறார்கள். இத்தனை பேருழைப்பும் இப்படி வீணாவதை பார்க்க மனம் பதைக்கிறது, கொதிக்கிறது. நாம் ஜப்பானிய மூளைக்காய்ச்சல், போலியோ முதலிய கொலைகார நோய்களை மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னே வென்றெடுக்க செயல்திறமிக்க தடுப்புஊசி திட்டங்களே காரணம். இப்படி கடைசி இடத்திற்கு போட்டியிட்டுக் கொண்டிருப்பது கேவலம்.
10. மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அறிவியலை பற்றிக்கொண்டு போராடியே ஆகவேண்டும். ஆக்சிஜன் அளவை வாயில் மின்விசிறியை வைத்து கூட்டமுடியாது. வேண்டுமானால் வாயில் ironbox வைத்து பொசுக்கிக் கொள்ளவும். தடுப்பு ஊசிபோட அஞ்சுவதும், இணையத்தில் உலவும் போலி அறிவியல் புளுகு மூட்டைகளும் உடனடியாக களையெடுக்கப்பட வேண்டும். இத்தகைய பொய்களை பரப்பி அப்பாவி மக்களின் உயிர்களோடு விளையாடுபவர்களை சிறையில் தள்ளி, அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
நவீன அறிவியல் மருத்துவத்தை நம்புங்கள். அது காலத்தை வென்று நிற்பது. அது தன்னை சுயபரிசோதனைக்கும், விமர்சனத்துக்கும் உட்படுத்திக்கொண்டே இருப்பது. அதைத்தவிர வேறொன்றும் உங்களை காப்பாற்றாது. அவ்வளவே.