Pongal Special Trains: பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்கள்.. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்கள்..!
பொங்கல் பண்டிக்கைக்காக சொந்த ஊருக்கு செல்லவுள்ள மக்களின் வசதிக்காக அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்களின் முன்பதிவு இன்று தொடங்குகிறது.
பொங்கல் பண்டிக்கைக்காக சொந்த ஊருக்கு செல்லவுள்ள மக்களின் வசதிக்காக அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்களின் முன்பதிவு இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பண்டிகை வரும் நிலையில் பொதுமக்கள் வியாழக்கிழமை (ஜனவரி 12) ஆம் தேதி முதலே சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஜனவரி 17 ஆம் தேதி வரை விடுமுறை உள்ள நிலையில், ரயில்களில் முன்பதிவு 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கி சில நிமிடங்களிலேயே முடிவடைந்தது.
இதனால் ரயில் பயணத்தை திட்டமிட்டிருந்த பயணிகள் ஏமாற்றமடைந்தனர். மேலும் தனியார் பேருந்துகளில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், அரசு பேருந்துகளில் இன்னும் முன்பதிவு தொடங்கப்படவில்லை. இந்நிலையில் ரயில் பயணிகளின் வசதிக்காக 5 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், கேரளாவுக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
தாம்பரம் - நாகர்கோவில்
அதன்படி , தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில் (06041) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13 ஆம் தேதி இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06042) ஜனவரி 16 ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 05.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை - திருநெல்வேலி
தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06021) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12 ஆம் தேதி இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரயில் (06022) திருநெல்வேலியிலிருந்து ஜனவரி 13 ஆம் தேதி மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கூடுதலாக தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.
தாம்பரம் - திருநெல்வேலி ரயில்
தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06057) ஜனவரி 16 ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06058) திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 17 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
தாம்பரம் - திருவனந்தபுரம் கொச்சுவேலி ரயில்
கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06044) ஜனவரி 17 ஆம் தேதி கொச்சுவேலியில் இருந்து காலை 11.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இதேபோல் தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு கட்டண ரயில் (06043) தாம்பரத்திலிருந்து ஜனவரி 18 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.
இந்த ரயில்கள் திருவனந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், துறைமுகம் சந்திப்பு, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல்
எர்ணாகுளத்தில் இருந்து ஜனவரி 12 ஆம் தேதி 11.20 மணிக்கு புறப்படும் ரயில் (எண். 06046) மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 13 ஆம் தேதி மதியம் 2.50 மணிக்கு புறப்படும் ரயில் (எண்.06045) மறுநாள் காலை 3.10 மணிக்கு கேரளாவின் எர்ணாகுளம் சென்றடையும். இந்த ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக இயக்கப்படுகிறது.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பொங்கலுக்கு தங்கள் ஊருக்கு செல்ல காத்திருந்த பயணிகள் பலரும் ஏமாற்றமடைந்து திரும்பி சென்றனர். இதையடுத்து, இன்று டிக்கெட் புக் செய்ய முடியாதவர்கள் வரும் 11ம் தேதி தட்கல் முறையிக் டிக்கெட் புக் செய்யலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.