Pongal Gift Token: நாளை முதல் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்..! 1000 ரூபாய் பெறுவது எப்படி..?
பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை ஜனவரி 9ம் தேதி தமிழக முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ள நிலையில், நாளை முதல் ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு டோக்கன் நாளை முதல் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு:
பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை வரும் ஜனவரி 9 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ள நிலையில், நாளை முதல் ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 8 ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது. அதன் பின்னர் 9ம் தேதி முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்கும் நிலையில், அன்றைய தினமே ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
டோக்கன் பெறுவது எப்படி?
நாளை முதல் வீடு வீடாக ரேஷன் கடை ஊழியர்கள் வந்து டோக்கன் வழங்குவார்கள் என்றும், அதில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் தேதி, நேரம் ஆகியவை குறிப்பிட்டப்பட்டிருக்கும். நாள் ஒன்றுக்கு 200 பேருக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. பொங்கல் தொகுப்பில் ஏதாவது குறைகள் இருந்தால் புகார் தெரிவிக்க எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் தொகுப்பு பெற்றவுடன் குறுஞ்செய்தி குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆலோசனையும் அறிவிப்பும்:
நடப்பாண்டு பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கலை சிறப்பாக கொண்டாடும் விதமாக ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார். அதுமட்டும் இல்லாமல் ரொக்கப் பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை ஆகியவற்றை வழங்கிடவும் உத்தரவிடப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் உள்ள 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் இந்த பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது .2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதன் மூலமாக தமிழக அரசுக்கு ரூ. 2,356.67 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் அரிசி, வெல்லம், கரும்பு மற்றும் மளிகைப் பொருட்கள் என மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், பணம் வழங்கப்படாததால் மக்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.
கரும்பு:
இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்காததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து கரும்பும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான கரும்புகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு 72 கோடியே 38 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது.
அதன்படி ஒரு கரும்புக்கு போக்குவரத்து செலவு உட்பட 33 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனிடையே, கரும்பு கொள்முதல் செய்ய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது.
பன்னீர் கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். 6 அடிக்கு குறையாத கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். சராசரி தடிமனை விட கூடுதல் தடிமனாக கரும்பு இருக்க வேண்டும். நோய் தாக்கிய நிலையில் இருக்கும் பன்னீர் கரும்பினை கொள்முதல் செய்யக் கூடாது. விவசாயிகள் தரப்பில் இருந்து புகார்களுக்கு இடமளிக்காத வகையில் அந்த மாவட்டங்களில் விளையும் கரும்பை கொள்முதல் செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும்.
முறைப்படி கொள்முதல்:
கரும்பு விளையாத மாவட்டங்களில் விநியோகம் செய்ய, அருகில் உள்ள மாவட்டங்களில் விளையும் கரும்பினை வழிகாட்டு நெறிமுறைப்படி கொள்முதல் செய்யலாம். கரும்பு கொள்முதல் பணியின் போது சிறு, குறு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஒரு கிராமத்தில் ஒரே விவசாயியிடம் ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்யாமல், கிராமம் முழுவதும் கரும்பின் தரம் அடிப்படையில் பரவலாக கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரும்பு கொள்முதல் பணியில் எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்கள் அனுமதிக்கப்படக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான விலையை சம்பந்தப்பட்ட விவசாயியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.